ஜனாதிபதிக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிபதிகளுக்கு உண்டு-துணை ஜனாதிபதிக்கு நீதிபதி செல்லமேஸ்வர் பதிலடி
சென்னை: நாடாளுமன்றம், சட்டசபை நிறைவேற்றும் சட்டங்களை கேள்விக்குள்ளாக்கும் நீதிபதிகளுக்கு அரசியல் சாசன பதவிகளில் இருப்பவர்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் எப்படி இல்லாமல் போகும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாடு அரசு வழக்கில் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்ததற்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீதிபதி செல்லமேஸ்வர் இந்த பதிலடியை தந்துள்ளார்.
சென்னையில் திமுக ராஜ்யசபா எம்பி என்ஆர் இளங்கோ ஏற்பாடு செய்த, நீதி மற்றும் சமவாய்ப்புக்கான ராகேஷ் நினைவு சட்ட அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு நிகழ்வில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் பங்கேற்று 'அரசமைப்பு சட்டத்தின் 75 ஆண்டுகால பயணம்' என்கிற தலைப்பில் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் பேசியதாவது: நாட்டின் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்றம் அல்லது சட்டசபை நிறைவேற்றுகிற சட்டங்கள், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளிக்கக் கூடியவர்கள். அப்படியான அதிகாரம் கொண்ட நீதிபதிகள், அரசியல் சாசன பதவியில் உள்ள ஜனாதிபதி அல்லது ஆளுநர்களுக்கு வழிகாட்டுகிற உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்.
நாட்டில் அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை நாம் கொண்டாடுவதை விட சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டை ஏன் கொண்டாடுகிறோம் என்ற கேள்விதான் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஏனெனில் அரசியல் சாசனத்தில் முகப்பில் இடம் பெற்றுள்ள கோட்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு என்ன மாதிரியான பங்களிப்பை நாம் செய்துள்ளோம் என்பதும் முக்கியமான கேள்வி. நாம் ஒரு நீதிபதியாக, வழக்கறிஞராக, அரசியல்வாதியாக.. யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் அரசியல் அமைப்பின் கோட்பாடுகளை நிறைவேற்ற என்ன பங்களிப்பு செய்தோம்?
கடந்த 75 ஆண்டுகளில் அரசியல் சாசாத்தில் 100க்கும் மேற்பட்ட திருத்தங்களை நாம் செய்திருக்கிறோம். நாட்டின் நீதித்துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது ஆரோக்கியமானதும் அல்ல. இந்த நாட்டில் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரிகளிடம் அதிகாரங்கள் செல்லக் கூடாது. அப்படி அதிக அதிகாரங்கள் குவிக்கப்படும் போது துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கிவிடும். அதனால்தான் அதிகாரங்கள் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இவ்வாறு நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.












Click it and Unblock the Notifications