Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓவைசி ‛அவுட்’.. கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜேடிஎஸ் திடீர் ஆதரவு! விழிக்கும் பாஜக-ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் முன்னாள் முதல்வர் குமாரசாமி கூட்டணி அமைக்காத நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய குடியரசு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஜேடிஎஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த எதிர்பாராத ட்விஸ்ட்டால் பாஜக கலங்கி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தனித்து களமிறங்கி உள்ளன. மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்று வருகிறது.

அதேவேளையில் பாஜகவில் இருந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இதுதவிர தொங்கு சட்டசபை அமைந்தால் கிங்மேக்கராக ஜேடிஎஸ் மாறலாம். இதனால் கணிசமான இடங்களில் வெற்றி பெற அக்கட்சியும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

Karnataka election: JDS drops alliance plan with AIMIM and supports to Congress candidate

இதுதவிர ஆம்ஆத்மி, எஸ்டிபிஐ, பகுஜன் சமாஜ், ஜனார்த்தன ரெட்டியின் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தங்களின் பலத்தை காட்ட தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக கர்நாடகா சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வரான குமாரசாமியின் (முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன்) ஜேடிஎஸ் கட்சி, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு இருந்தது.

காங்கிரஸ் கட்சியை போல் இந்த இருகட்சிகளுக்கும் கர்நாடகாவில் வாழும் முஸ்லிம் மக்களின் ஆதரவு உள்ளது. இதனால் இருகட்சிகளும் கூட்டணி அமைத்து காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக செயல்பட திட்டமிட்டு இருந்தன.
ஆனால் தற்போது அந்த திட்டத்தை ஜேடிஎஸ் கட்சி கைவிட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஜேடிஎஸ் கட்சி 148 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நேற்று மனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் இன்று பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஜேடிஎஸ் கட்சி தான் போட்டியிடாத பிற இடங்களில் வேறு கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த லிஸ்ட்டில் காங்கிரஸ் கட்சி இருக்கும் நிலையில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இல்லை.

மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பல தொகுதிகளில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிட்டாலும் கூட அந்த கட்சிக்கு ஜேடிஎஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் இருகட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி உருவாகவில்லை. இதுதான் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

இந்த கூட்டணி உருவாகாமல் இருந்ததன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளதாம். இதுபற்றி ஜேடிஎஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‛‛மாநிலத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அது பிற தொகுதிகளில் ஜேடிஎஸ் கட்சியை பாதிக்கும் என பல மூத்த தலைவர்கள் கூறினர். இதையடுத்து இந்த முடிவு கைவிடப்பட்டது'' என்றார்.

அதேபோல் ஜேடிஎஸ் எம்எல்சியும், கட்சியின் கோர் கமிட்டி ஒருங்கிணைப்பாளருமான திப்பேசாமி கூறுகையில், ‛‛இருகட்சிகளின் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை'' என்றார். இதனால் தான் தேர்தலில் ஜேடிஎஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சி இடையேயான கூட்டணி கைகூடவில்லை என்றார்.

இதற்கிடையே தான் ஜேடிஎஸ் கட்சி பிற கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி கலபுரகி மாவட்டம் கலபுரகி புறநகர், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி, பெங்களூர் கேஆர்புரம் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல் பெங்களூர் சிவி ராமன்நகர், விஜயநகர் மற்றும் மகாதேவபுரா தொகுதிகளில் ஜேடிஎஸ், இந்திய குடியரசு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

Karnataka election: JDS drops alliance plan with AIMIM and supports to Congress candidate

மேலும் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான தர்ஷன் துருவநாராயணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், மாநில செயல் தலைவராகவும் இருந்த முன்னாள் எம்பி துருவநாராயணனின் மகன் ஆவார். துருவநாராயணன் சமீபத்தில் மறைந்த நிலையில் அவரது மகன் தர்ஷனுக்கு ஜேடிஎஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேடிஎஸ் கட்சியின் இந்த நடவடிக்கையால் பாஜக கலங்கியுள்ளது. ஏனென்றால் ஜேடிஎஸ், ஏஐஎம்ஐஎம் கட்சிகள் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் பிரியும். இதனால் பாஜகவுக்கு சாதகமான சூழல் ஏற்படலாம் என அக்கட்சி நினைத்தது. தற்போது அது நடக்காமல் போய் உள்ளது.

அதேபோல் ஒருவேளை மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் ஜேடிஎஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்போது ஜேடிஎஸ் கட்சியோ நஞ்சன்கூடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் தொங்குசட்டசபை உருவானால் ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சியின் பக்கம் சாய்ந்துவிடுமோ எனவும் பாஜக கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+