கர்நாடகா: ஒக்கலிகா பெல்ட் மாண்டியாவில் அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரம்- கை கொடுக்குமா இடஒதுக்கீடு?
மாண்டியா: கர்நாடகாவின் மாண்டியாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். ஒக்கலிகா (வொக்கலிகர்) கவுடா ஜாதியினர் பெரும்பான்மையினராக இருக்கும் மாண்டியாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்வது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக அரசு எப்படியாவது வெல்ல வேண்டும் என தீவிரம் காட்டுகிறது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் வேகம் காட்டுகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு நடுவே கிங் மேக்கராக உருவெடுக்க தேவகவுடா குடும்பத்தின் ஜேடிஎஸ் போராடிக் கொண்டிருக்கிறது.

ஜேடிஎஸ் கட்சி தமது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஜேடிஎஸ் கட்சியினரின் வாக்கு வங்கியாக ஒக்கலிகா கவுடா ஜாதியினர்தான் உள்ளனர். ஆனால் கடந்த சில தேர்தல்களில் ஒக்கலிகா கவுடாக்கள் வாக்குகள், காங்கிரஸுக்கு கிடைத்துவருகிறது. ஆகையால் இழந்த செல்வாக்கை மீட்க ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் குமாரசாமி, யாத்திரை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஆளும் பாஜகவுக்கு தலைவலியாக பல்வேறு பிரச்சனைகள் வரிசைகட்டி நிற்கின்றன. மகாராஷ்டிரா எல்லை கிராமங்கள் விவகாரத்தில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதியினராகிய லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடாக்கள் இடஒதுக்கீடு அளவை உயர்த்த கோருகின்றனர். இது தொடர்பாக கர்நாடகா அமைச்சரவை கூடி சில நகர்வுகளை மேற்கொண்டிருக்கிறது. இருந்த போதும் இடஒதுக்கீடு விவகாரத்தில் இறுதி முடிவு வரும் வரை பாஜக அரசுக்கு டென்ஷன் தொடரவே செய்யும்.
தற்போது கர்நாடகாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முகாமிட்டுள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை மாண்டியா பகுதியில் இன்று தொடங்குகிறார் அமித்ஷா. மாண்டியா என்பது ஒக்கலிகா கவுடாக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் பகுதி. காங்கிரஸ், ஜேடிஎஸ் கோட்டையாக இருக்கும் மாண்டியாவில் இருந்தே அமித்ஷா தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் ஒக்கலிகா கவுடா மடாதிபதிகளை சந்தித்து ஆதரவைப் பெற பாஜக முன்முயற்சிகளை எடுத்தது. ஆனால் அம்முயற்சிகள் கை கொடுக்கவில்லை. இப்போது அமித்ஷா தமது பிரசாரத்தையே ஒக்கலிகா பெல்ட்டில் இருந்து தொடங்கி இருப்பது கர்நாடகா தேர்தல் களத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications