காஷ்மீர் 370-வது சட்டப்பிரிவு நீக்கம்: உள்ளூர்வாசிகள் தீவிரவாதிகள் ஆவது ஏன்?
ஒவ்வொரு முறை பஷீர் அகமது பட்டின் பார்வை சுவரில் உள்ள இரத்தக் கறை மீது விழும்போதும், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் போலீசில் பணியாற்றிவந்த தனது சகோதரர் கொல்லப்பட்ட கொடூரமான இரவு அவரது நினைவில் நிழலாடும்.
அது ஒரு ஜூன் மாதம். பஷீர் தூங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அவர், படுக்கையை விட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தார்.
நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி அவரைத் திடுக்கிடவைத்தது. அவரது சகோதரர், தனது வீட்டு வாசலில் இறந்து கிடந்தார். அவரது மனைவியும் மகளும் அவருக்கு அருகில் ரத்த வெள்ளத்தில் உயிர் துடிக்கக் கிடந்தனர். பின்னர் அவர்களும் உயிரிழந்தனர்.
"ஒரு ஆனந்தமான தோட்டம் போல இருந்த, ஒரு தவறும் செய்யாத, அந்தக் குடும்பத்தை அந்தத் தோட்டாக்கள் சிதைத்தன," என்ரு பஷீர் நினைவு கூருகிறார்.
அந்தக் குடும்பத்தினர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல் துறை கூறுகிறது. பஷீரின் சகோதரர் ஃபயாஸ் அகமது பட் போன்ற பல அதிகாரிகள் பெரும்பாலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். உள்ளூர் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக தீவிரவாதம் நிலவி வருகிறது.
"எல்லைக்கு அப்பால் உள்ளவர்களால் இவர்கள், காவல் துறைக்குத் தகவல் தந்து ஒத்துழைப்பவர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள்தான் எப்போதும் முதலில் இலக்காகிறார்கள்" என்று டெல்லியைச் சேர்ந்த பாதுகாப்பு சிந்தனைக் கள நிறுவனமான இன்ஸ்டிட்யூட் ஆஃப் கான்ஃப்லிக்ட் மேனேஜ்மென்ட் இயக்குநரான அஜய் சாஹ்னி கூறுகிறார்.
ஜம்மு -காஷ்மீருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுயாட்சியை நீக்கி, அரசியலமைப்பின் 370 வது பிரிவை 2019 ஆகஸ்ட் 5 அன்று, இந்தியா ரத்து செய்தது. அந்த நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்து தேசியவாத பாஜக தலைமையிலான அரசு, அப்பிராந்தியத்தின் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் பொருளாதாரச் செழிப்பைக் கொண்டுவருவதற்கும் இந்த நடவடிக்கை அவசியம் என்ற வாதத்தை முன்வைத்தது.
- சட்டப்பிரிவு 370 சிறப்புரிமை ரத்து: இனி என்னென்ன நிகழும்?
- காஷ்மீர் விவகாரம்: அரசமைப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் அதுசார்ந்த போலிச் செய்திகள்
ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகும், கஷ்மீர் பள்ளத்தாக்கு தொடர்ந்து பதற்றமாகவே உள்ளது, மேலும் உள்ளூர் இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி இழுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
1989 முதல் காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி நடந்து வருகிறது.
ஆனால் இந்த எதிர்ப்பு உள்ளூரிலேயே உருவாவது இப்போது அதிகரித்து வருவதாகவும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் இது நடப்பது கவலையளிக்கும் விஷயம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பல பத்தாண்டுகளாக காஷ்மீர், மோதல்கள் மற்றும் அமைதியின்மை காரணமாகப் பொலிவிழந்து வருகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் முழு காஷ்மீர் நிலப்பரப்புக்கும் உரிமை கோருகின்றன, ஆனால் சில பகுதிகளை மட்டுமே இரண்டு நாடுகளும் கட்டுப்படுத்துகின்றன. அண்டையில் உள்ள, தற்போது அணு ஆயுத பலம் வாய்ந்த இரு நாடுகளும் இதன் காரணமாகவே கடந்த காலத்தில் இரு முறை போரிட்டும் உள்ளன.
பல ஆண்டுகளாக, இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீர் பகுதியில் பதற்றத்தைத் தூண்ட ஆயிரக்கணக்கான போராளிகளை எல்லை தாண்டி ஊடுருவச் செய்து வருவதாக பாகிஸ்தான் மீது தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. பாகிஸ்தானும் இதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் எப்போதுமே பதற்றம் நிறைந்ததாகத்தான் இருந்து வந்துள்ளது என்றாலும், 2019-ல் 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டது நிலைமையை மோசமடையச் செய்துள்ளது.
இந்தச் சிறப்பு அந்தஸ்து கஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டுகிறது என்று கூறி இந்த சர்ச்சைக்குரிய முடிவை நியாயப்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோதி .
பாஜக அமைச்சர்கள் அவரது குரலை எதிரொலித்தனர். சிலர் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை "வரலாற்றுத் தவறு" என்று குறிப்பிட்டனர். கஷ்மீர் இப்போது "முன்னெப்போதும் இல்லாத வகையில்" அமைதியாக இருக்கிறது என்று கூறினர்.
பாதுகாப்புப் படையினர் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தாலும் இப்பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்தது.
2019 முதல், அரசாங்கம் உள்ளூர் மக்களின் சொத்து உரிமைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இது மக்களிடையே பரவலான சந்தேகத்தை எழுப்பியது. இந்தப் புதிய சட்டங்கள், இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை பிராந்தியமான காஷ்மீரின் மக்கள்தொகை தன்மையை மாற்றும் என்று உள்ளூர்வாசிகள் அஞ்சுகின்றனர்.
காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சமீபத்திய அரசியல் மாற்றங்கள் இந்தக் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி பிபிசியிடம் பேசும்போது, "தற்போது செயல்படும் 200 தீவிரவாதிகளில், 80 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் 120 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளூர்வாசிகள் என்றும் நம்பப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், 76 காஷ்மீரிகள் ஆயுதங்களை எடுத்துள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது," என்று கூறினார்.
காஷ்மீரில் இந்த ஆண்டு தீவிர தீவிரவாதிகள் பட்டியலில் புதிய வெளிநாட்டு தீவிரவாதிகள் யாரும் சேர்க்கப்படவில்லை என்றும் ஆனால் உள்ளூர் மக்களின் பெயர்கள் ஒவ்வொரு நாளும் சேர்க்கப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.
- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ சட்டப்பிரிவு என்ன? 5 கேள்வி - பதில்கள்
- "தமிழகத்தை யூனியன் பிரதேசமாக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" - திருச்சி சிவா
ஆயுதம் எடுக்கும் போராளிகள் அனைவரும் தெரிந்த போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. சிலர் போதிய பயிற்சி இல்லாமலும் நவீன ஆயுதங்கள் இல்லாமலும் சண்டை போடுகிறார்கள். இவர்கள், பெரும்பாலும் இந்தியப் படைகளுடன் துப்பாக்கிச் சண்டையில் இறந்துவிடுகிறார்கள்.
இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து, காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 90 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசுத் தரவுகள் கூறுகின்றன. ஏறக்குறைய அனைவரும் உள்ளூர்வாசிகள் என்றும் 14 வயது சிறுவர்களும் இதில் அடக்கம் என்று கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் கொள்கைகள் கோபத்தை தூண்டியிருப்பது உண்மையானாலும், காஷ்மீர் தீவிரவாதம் உள்ளூரில் தான் உருவாகிறது என்று பாகிஸ்தான் நிரூபிக்க விரும்புவதாலும், ஆயுதமேந்தும் உள்ளூர் வாசிகளின் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று சாஹ்னி கூறுகிறார்.
ஆனால் தீவிரவாதத்தின் "ஒட்டுமொத்தப் போக்கு" குறைந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
பிப்ரவரியில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டதாலும் எல்லைகளில் கட்டுப்பாடு இறுக்கமாக்கப்பட்டதாலும் இந்தத் தீவிரவாதக் குறைப்பு சாத்தியமானதென பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
எல்லைப் பகுதியில் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு என்பது, தீவிரவாதிகளைப் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடுருவச் செய்வதற்கான ஒரு நாடகம் தான் என்று பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இந்திய இராணுவ செய்தித் தொடர்பாளர், "பிப்ரவரியில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அது மீறப்படவில்லை, இதன் காரணமாக எல்லை தாண்டிய ஊடுருவலும் கடுமையாக குறைந்துள்ளது" என்றார்.
ஆனால் பஷீர் போன்றவர்களுக்கு அமைதி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
"இந்தியாவும் பாகிஸ்தானும் எங்கள் வாழ்க்கையுடன் விளையாடுகின்றன," என்று அவர் கூறினார். "காஷ்மீரிகள் உயிரிழக்க நேராதவாறு ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்" என்று அவர் வலியுறுத்துகிறார்.
பிற செய்திகள்:
- டெல்லியை உலுக்கும் 9 வயது சிறுமியின் மரணம்: 'பாலியல் வல்லுறவு என பெற்றோர் புகார்'
- நரேந்திர மோதிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்க வல்லவர் சரத் பவாரா மமதா பானர்ஜியா?
- பெட்ரோலுக்கு அதிக வரி வசூலிப்பது மத்திய அரசா மாநில அரசா? #Factcheck
- விண்வெளி அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - 5 கேள்வி பதில்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
















Click it and Unblock the Notifications