For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்ஸ்டாகிராம் புகைப்படங்களால் ஏற்பட்ட சர்ச்சை: ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வைத்த பல்கலைக்கழகம்

By BBC News தமிழ்
|
சித்தரிப்புப் படம்
Getty Images
சித்தரிப்புப் படம்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் ஒரு புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மோசமான சர்ச்சையில் சிக்கியது.

செயின்ட் சேவியர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியர் ஒருவர் பிகினி உடையில் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததற்காக தான் வேலையை விட்டுச்செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பிபிசியிடம் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.

தனது பெயரைக்குறிப்பிட வேண்டாம் என்று கோரிய 31 வயதான அவர், பல்கலைக்கழக அதிகாரிகள் மீது"பாலியல் துன்புறுத்தல்" குற்றச்சாட்டுகளை சுமத்தினார். "தான் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும்,'ஒழுக்க கண்காணிப்பிற்கு' உட்படுத்தப்பட்டதாகவும்," அவர் கூறுகிறார்.

அவர் காவல்துறையில் புகார் அளித்து, பல்கலைக்கழகத்திற்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள பல்கலைகழகம் அவர் மீது மானபங்க குற்றச்சாட்டை சுமத்தி 99 கோடி ரூபாயை இழப்பீடாகக் கோரியுள்ளது.

'நான் விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்'

இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளுக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்காக 2021 ஆகஸ்ட் 9 ஆம் தேதி தான் பணியில் சேர்ந்ததாக உதவிப் பேராசிரியர் கூறுகிறார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு சந்திப்பிற்காக துணைவேந்தர் அறைக்கு அவர் அழைக்கப்பட்டார்.

அவர் "விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" . அங்கு துணைவேந்தர் ஃபெலிக்ஸ் ராஜ், பதிவாளர் ஆஷிஷ் மித்ரா மற்றும் ஐந்து பெண்கள் அடங்கிய குழுவால் அவர் விசாரிக்கப்பட்டார்.

முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர் ஒருவரின் தந்தையிடமிருந்து அவர் மீது புகார் வந்திருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

"இன்ஸ்டாகிராமில் நான் எனது உள்ளாடைகளை மட்டுமே அணிந்திருந்த புகைப்படங்களை தனது மகன் பார்த்துக் கொண்டிருப்பதை இந்தப் பெற்றோர் கண்டதாக துணைவேந்தர் கூறினார். அவை வெளிப்படையான பாலியல் தன்மை கொண்டவை என்றும் தனது மகனை இதுபோன்ற மோசமான செயல்களில் இருந்து காப்பாற்றுமாறு பல்கலைக்கழகத்தை கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குழுவின் உறுப்பினர்களிடையே "ஐந்து-ஆறு புகைப்படங்களுடன்" ஒரு துண்டு காகிதமும் விநியோகிக்கப்பட்டது. மேலும் அவை தன்னுடையது என்பதை உறுதிப்படுத்தும்படி பேராசிரியரிடம் கூறப்பட்டது.

'நான் தவறு இழைத்தாக குற்றம்சாட்டப்பட்டேன்'

தன்னுடைய நீச்சலுடை புகைப்படங்கள், தனது அறையில் எடுக்கப்பட்ட செல்ஃபிகள் என்றும் அவற்றை இன்ஸ்டாகிராமில் 'ஸ்டோரி'யாக பகிர்ந்ததாகவும் அவர் கூறுகிறார். அதாவது அவை 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே காணாமல் போய்விடும்.

சித்தரிப்புப் படம்
Getty Images
சித்தரிப்புப் படம்

ஆனால் தான் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே மற்றும் தனது தனிப்பட்ட கணக்கைப் பின்தொடர தனது மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே அந்தப் புகைப்படங்கள் 2021 ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்பட்டன என்ற அவரது விளக்கத்தை குழு நிராகரித்தது.

"நான் அதிர்ச்சியடைந்தேன். எனது தனிப்பட்ட புகைப்படங்கள் எனது அனுமதியின்றி பகிரப்பட்டிருப்பதை பார்த்து பீதியடைந்தேன்," என்று அவர் என்னிடம் கூறினார்.

"என் சொந்த புகைப்படங்களை என்னாலேயே பார்க்க முடியவில்லை. அவை என்னிடம் காட்டப்பட்டவிதம் மற்றும் அவற்றைச் சுற்றிய உரையாடல் அவை மோசமானவை என்று என்னை நினைக்க வைத்தது. நான் தவறு செய்துள்ளேன் என்று என்னை நம்ப வைக்கும் முயற்சி இது என்று உணர்ந்தேன். நான் ஏமாற்றப்பட்டதாக கருதினேன்."

'உங்கள் புகைப்படங்களை உங்கள் பெற்றோர் பார்த்தார்களா?'

"ஏன் அதைச் செய்தீர்கள்? என்று என்னிடம் கேட்கப்பட்டது. இதை ஆட்சேபத்திற்குரியதாக ஒரு பெண்ணான நீங்கள் நினைக்கவில்லையா? ஒரு பேராசிரியராக, நீங்கள் ஒழுக்கமாக நடந்துகொள்வது சமூகத்தின்பால் உங்கள் கடமை அல்லவா? பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியாதா? இது போன்ற கேள்விக்கணைகள் என்னைத் துளைத்தன.

"பல்கலைக்கழகத்திற்கு நான் அவப்பெயரையும் அவமானத்தையும் கொண்டு வருவதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். எனது பெற்றோர் இன்ஸ்டாகிராமில் இருக்கிறார்களா, அவர்கள் அந்தப் படங்களைப் பார்த்தார்களா என்றும் என்னிடம் கேட்கப்பட்டது. எனக்கு அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது."

எழுத்துமூலமான அறிக்கையுடன் மறுநாள் திரும்பும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

மன்னிப்பு மற்றும் 'கட்டாய ராஜினாமா'

துணை பேராசிரியர் மறுநாள் துணைவேந்தர் அலுவலகத்திற்குத் திரும்பி மன்னிப்புக்கடிதத்தை அளித்தார். "பாலினக் குழுவின் தலைவர் உட்பட சில ஆசிரிய உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் இது எழுதப்பட்டது". முன்னாள் வகுப்புத் தோழரும் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியருமான ஒருவரும் அவரை விசாரித்த குழுவின் உறுப்பினராக இருந்தார்.

"பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் எனது படங்கள் இருக்குமேயானால் அதற்காக நான் வருந்துகிறேன்" என்று அவர் அந்தக்கடிதத்தில் எழுதியிருந்தார்.

இது "மிகவும் மோசமான அனுபவம்" என்று அவர் கூறினார். இந்த விஷயம் அங்கேயே முடிவடையும் என்று தான் எதிர்பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

"ஆனால் என்னை பணிநீக்கம் செய்ய வாரியம் ஒருமனதாக பரிந்துரை செய்ததாக துணைவேந்தர் கூறினார். உங்கள் புகைப்படங்கள் வைரலாகிவிட்டன. பெரும்பாலான மாணவர்கள் அவற்றைப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள். பெற்றோர்கள் புகார் செய்வார்கள். ஆகவே தானாக முன்வந்து நீங்கள் ராஜினாமா செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்."

"நான் அதைச் செய்யவில்லை என்றால், பெற்றோர் போலீசில் புகார் செய்வார்கள். நான் சிறைக்குச் செல்வேன், நான் கைது செய்யப்படுவேன் என்றும் துணைவேந்தர் கூறினார்."

"நான் ஒரு மூலைக்கு தள்ளப்பட்டதாக உணர்ந்தேன். நான் ராஜினாமா செய்தேன்," என்று அவர் கூறுகிறார்.

இன்ஸ்டாகிராம்
Getty Images
இன்ஸ்டாகிராம்

"ஆனால் நான் மிகவும் கோபமாக உணர்ந்தேன் சட்ட ஆலோசனையை நாடினேன். எனது புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டடு, ஸ்கிரீன்ஷாட்கள் எடுக்கப்பட்டு, எனது அனுமதியின்றி பகிரப்பட்டது. எனவே சைபர்-கிரைம் போலீசில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்க எனது வழக்கறிஞர் பரிந்துரைத்தார்," என்று அவர் கூறினார்.

'நாங்கள் அவரை ராஜினாமா செய்யும்படி சொல்லவில்லை'

அவரை பணிநீக்கம் செய்ய குழு பரிந்துரைத்ததா என்பது குறித்து கருத்து தெரிவிக்க ஃபாதர் பெலிக்ஸ் ராஜ் மறுத்துவிட்டார். கூடவே பல்கலைக்கழகம் மற்றும் தனக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

"நாங்கள் கற்றல் மற்றும் அறிவின் புனிதமான ஸ்தாபனம். மூத்த பேராசிரியரும் பல்கலைக்கழகத்தின் தலைவருமான நான் அந்தப் படங்களை அவர் பகிர்ந்திருக்கக்கூடாது என்று சொன்னேன்."

அப்போதும் கூட, "அவரை ராஜினாமா செய்ய வற்புறுத்தவில்லை. தன் சொந்த விருப்பப்படி அவர் வெளியேறினார்" என்று அவர் கூறுகிறார்.

"அக்டோபர் 8 [2021] அன்று அவர் மன்னிப்புக் கடிதம் கொடுத்தார். நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். இது நல்ல நடவடிக்கை என்று நினைத்தேன். ஆனால் துர்கா பூஜை விடுமுறைக்குப்பிறகு கல்லூரி மீண்டும் திறக்கப்பட்ட அக்டோபர் 25-ஆம் தேதி அவர் தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்."

"விடுமுறைக்குப் பிறகு அவர் வேலைக்குத் திரும்புவார் என்று நான் எதிர்பார்த்தேன். இந்த இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார். தங்களுக்கு "அவர் மீது எந்த வெறுப்பும் இல்லை" என்றும் "நாங்கள் அவரிடம் மிகவும் நன்றாகவே நடந்துகொண்டோம்," என்றும் அவர் மேலும் கூறினார்.

பல்கலைக்கழகத்தில் பணிக்குச்சேர்ந்த பிறகு புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றும், ஆசிரியர் ஒருவரின் நாசவேலை இது என்றும் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் கேட்டதற்கு, தான் "தொழில்நுட்பத்தில் நிபுணர் இல்லை" என்று ஃபாதர் ஃபெலிக்ஸ் கூறினார்.

'காட்டுமிராண்டித்தனமான ஒழுக்க மேற்வார்வை'

சித்தரிப்புப் படம்
Getty Images
சித்தரிப்புப் படம்

ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கை பல மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களால் "பிற்போக்குத்தனமானது" என்று விமர்சிக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் கல்வி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட, முன்னாள் பல்கலைக்கழக மாணவர் கௌரவ் பானர்ஜியால் தொடங்கப்பட்ட change.org மனு, 25,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துகளைப் பெற்றுள்ளது.

பேராசிரியரிடம் பல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அதன் நடத்தைக்காக உயர்மட்ட கமிட்டி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டுக்கொள்வதாகவும் கெளரவ் பானர்ஜி பிபிசியிடம், கூறினார்.

"பல்கலைக்கழகத்தால் இதுபோன்று ஏதாவது செய்ய முடியுமா என்று என்னைப் போலவே நிறைய பேர் திகிலடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் கூறினார்.

சமீபத்தில் பல்கலைக்கழகத்தின் டஜன் கணக்கான மாணவர்கள், கறுப்பு உடை அணிந்து, பேராசிரியருக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், பல்கலைக்கழக கேன்டீனுக்கு வெளியே திடீர் மெளனப் போராட்டத்தை நடத்தினர்.

"எங்கள் பேராசிரியர் ஒருவர் இந்த கொடூரமான ஒழுக்க கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டதைப் பற்றி நாங்கள் அறிந்தோம்," என்று பங்கேற்பாளர்களில் ஒருவர் என்னிடம் கூறினார்.

"இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனது தனிப்பட்ட இடத்தில் நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றி மற்றவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? "என்று அவர் கூறினார்.

" ஐந்து பெண்களை உள்ளடக்கிய குழு இது ஒழுக்க கண்காணிப்பு என்று நினைக்கவில்லையா?. இது மிகவும் பயமுறுத்தும் விஷயமாக உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

' எனக்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம்...'

தனக்கு அளிக்கப்பட்ட ஆதரவைப்பார்த்து தான் உணர்ச்சிவசப்பட்டுள்ளதாகவும், ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி," என்றும் பிரச்னையின் மையத்தில் உள்ள பேராசிரியர் கூறினார்.

"பல மாதங்கள் மனக்கஷ்டத்தில் இருந்த நான், இந்த சம்பவம் எத்தனை அர்த்தமில்லாதது என்று மக்கள் கருதுவதைப்பார்த்து பலம் பெற்றேன்," என்றார்அவர்.

"தனியுரிமை மற்றும் சுய வெளிப்பாடு உரிமை நசுக்க முடியாதது மற்றும் இந்திய அரசியலமைப்பால் இது நமக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த "ஒழுக்க கண்காணிப்பு" பணியிடத்திற்கு அப்பாலும் நீட்டிக்கப்பட்டுள்ளது."

"நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பான எனது நடத்தை அவர்களின் சமூக ஊடக நெறிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்களை எவ்வாறு மீறுகிறது?" என்று அவர் வினவினார்.

"நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது எனது உறுதியான நம்பிக்கை. நான் இதில் வெற்றி பெறாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு இது ஒரு முக்கியமான போராட்டம்," என்று அவர் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
kolkata St Xavier’s University professor forced to quit over ‘Instagram photos’
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X