Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதி ரீதியாக தலைவர் பதவி? பிகே போடும் பீகார் கணக்கு? தாக்குப் பிடிப்பாரா நிதீஷ்? தாக்குவாரா லாலு?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் புதியதாக அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது பீகார் அரசியல் களத்தில் பீதியைக் கிளப்பியுள்ளது. மேலும் அக்கட்சியின் தலைவராகத் தான் செயல்படப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளதால் எதிர்பார்ப்பு இன்னும் கூடி இருக்கிறது.

இந்தியத் தேர்தல் அரசியலில் தனது வியூகங்களால் பல தலைவர்களை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் நண்பர்களால் மிக அன்பாக பிகே என்று அடைமொழி போட்டு அழைக்கப்படுபவர். இவரது ஐபேக் நிறுவனம் பல மாநில தேர்தல் வெற்றிகளை தீர்மானித்திருக்கிறது. ஆரம்பக்காலத்தில் பீகார் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்த பிகே, பிறகு அதிலிருந்து 2020இல் வெளியேறினார்.

Prashant Kishor Bihar

2022இல் ஜன் சுராஜ் என்ற அமைப்பை நிறுவினர். இப்போது 47 வயதாகும் இந்தத் தேர்தல் கால புலி தனது அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால், அதற்குத் தான் தலைவராக இருக்கப் போவதில்லை என்றும் அறிவித்து இருக்கிறார்.

பலரது அரசியல் வாழ்க்கையை அஸ்தமனத்திற்கு இட்டுச் சென்ற பிரசாந்த் கட்சியின் தலைவராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு பீகார் மாநிலக் கட்சிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பிரசாந்த் கிஷோர் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பீகாரில் ஜன் சுராஜ் கட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க இருக்கிறார்.

பாட்னாவிலுள்ள தனது கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சி தொடங்கும் முடிவை எடுத்திருந்தார். இவரது கட்சி, வருகின்ற 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று தெரிகிறது. அப்படிப் போட்டியிட்டால் அது முதல்வர் நிதிஷ்குமாரின் ஜே.டி.(யு) க்கு சவால்விடும் அளவுக்கு ஒரு சக்தியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கிஷோர் கடந்த 2 அக்டோபர் 2022 ஆம் ஆண்டு ஜன் சூராஜ் பிரச்சார பயணத்தைப் பீகாரில் தொடங்கினார். பீகார் முழுவதும் ஒரு பாத யாத்திரையை மேற்கொண்டார். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், புலம்பெயர்தலால் உருவாகும் சிக்கல் எனப் பலவற்றை அதன் மூலம் நேரடியாக ஆராய்ந்தார். அதன் பிறகு அந்தப் பயணம் அளித்த அனுபவத்தை ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

ஆனால், பிரசாந்த் நினைத்த அளவுக்கு அந்தப் பயணம் பீகார் மாநில அரசியலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதை உணர்ந்திருந்தும் அவர் புதிய கட்சியைத் தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளார். கட்சியில் 5 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்க்கும் திறமை யாருக்கு உள்ளதோ அவர்களைத் தேர்வு செய்து கட்சியின் தலைவராக நியமிப்போம் என அவர் கூறியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, அந்தச் சவாலில் வெற்றிபெறும் 25 விண்ணப்பதாரர்கள் கட்சியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜன் சுராஜ் கட்சியின் முதல் தலைவர் யார் என்பதை அமைக்கப்பட்டுள்ள ஏழு பேர் கொண்ட அதிகாரம் பெற்ற குழு முடிவு செய்யும் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவில் சமஸ்திபூரைச் சேர்ந்த டாக்டர் பூபேந்திர யாதவ், பெகுசராய்யைச் சேர்ந்த ஆர் என் சிங், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சுரேஷ் ஷர்மா, வழக்கறிஞர் கணேஷ் ராம், கிழக்கு சம்பாரனைச் சேர்ந்த டாக்டர் மஞ்சர் நசீன், போஜ்பூரைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் சிங், ஸ்வர்ணலதா சஹானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

"கட்சியில் ஐந்துவிதமான குழுக்கள் உள்ளன. தாவது பொதுப் பிரிவு, ஒபிசி, இபிசி(மிகவும் பிற்படுத்தப்பட்டோர்), எஸ்சி, எஸ்டி ஆகிவை அதில் அடங்கும். முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், எங்களது புதிய கட்சியின் முதல் தலைவர் இந்த வகுப்பிலிருந்து வருவார்" என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை பிரசாந்த் கிஷோரை மேற்கோள் காட்டியது.

"ஒருவரே தலைவராக இல்லாமல் சுழற்சி முறையில் தலைவர் பதவியில் பிரதிநிதித்துவம் அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதாவது தலைவரின் பதவிக்காலம் ஒரு வருடம்தான். இபிசி அல்லது முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்தவர் எங்கள் இரண்டாவது தலைவராகப் பதவியில் அமர்த்தப்படுவார். அதைத் தொடர்ந்து ஒபிசி, பொதுப்பிரிவினர் வேட்பாளர் போட்டியிட அனுமதிக்கப்படுவார். இதன் மூலம் 5 ஆண்டு காலத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் சரிசமமான பிரதிநிதித்துவம் கொடுப்போம்" என்று கிஷோர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜன் சுராஜ் கட்சியின் தலைவரின் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10 அல்லது 12 ஆம் வகுப்பு என பிரசாந்த் கிஷோர் வரையறுத்துள்ளார். லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோர் பீகாரில் அதிக படிக்கவில்லை என்றும் இவர் விமர்சித்துள்ளார். ஜன் சுராஜ் சாதி அடிப்படையிலான அரசியலில் ஈடுபடும் அதே வேளையில், அனைத்து சமூகங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.

Prashant Kishor Bihar

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுமார் 70 வேட்பாளர்கள் உட்பட, சமூக மக்கள்தொகை அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான திட்டங்களை அவர் வைத்துள்ளதாக சுட்டிக் காட்டி இருக்கிறார். இந்த பிரதிநிதித்துவம் மாநில மக்கள்தொகையில் அவர்களின் குறிப்பிடத்தக்க 36% பங்கை பிரதிபலிக்கிறது உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

இதனிடையே பிரபல சோசலிஸ்ட் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூரின் பேத்தியான ஜாக்ரிதி தாக்கூர், ஜன் சுராஜ் கட்சியில் இணைந்துள்ளார். அவருடன் சமீபத்தில் மக்களவைத் தேர்தலில் பக்சரில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ரா, முன்னாள் ஆர்ஜேடி எம்எல்சி ராம்பாலி சிங் சந்திரவன்ஷி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

ஜாக்ரிதி தாக்கூர், ஜன் சுராஜ் மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். அவரது தந்தை டாக்டர் பிரேந்திர தாக்கூர் அரசியலில் ஈடுபடவில்லை. மேலும், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ராம்பாலி சிங் சந்திரவன்ஷி சமீபத்தில் எம்எல்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது கூடுதல் செய்தி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+