விடிஞ்சா தேர்தல்.. காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்கள்- பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை!
அனந்தநாக்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிக்ள் அடுத்தடுத்து இரு தாக்குதல்களை நடத்தியதில் பாஜக நிர்வாகி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ராஜஸ்தான் சுற்றுலா பயணிகள் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறும் நிலையில் பயங்கரவாதிகள் வெறித்தனம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலின் 5-வது கட்ட வாக்குப் பதிவு நாளை 49 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியும் ஒன்று. ஜம்மு காஷ்மீரில் வாக்குப் பதிவு ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அனந்தநாக் மாவட்டத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் அடுத்தடுத்து இரு தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இத்தாக்குதல்களில் பாஜகவை சேர்ந்த அஜாஸ் அகமது என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு இடத்தில் சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர்.
பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதல்களுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மெகபூபா முப்தி தமது சமூக வலைதளப் பக்கத்தில், பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். எந்த ஒரு காரணமுமே இல்லாமல் தேர்தல் வாக்குப் பதிவின் போது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.
பரூக் அப்துல்லா கூறுகையில், இத்தகைய காட்டுமிராண்டித்தனங்களை அனைத்து தரப்பும் கண்டிக்க வேண்டும். இத்தகைய சவால்களை அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications