குறிச்சுக்கோங்க! பிரதமராக இதுதான் கடைசி சுதந்திர தின உரை! மோடியை டார்கெட் செய்த மம்தா! சரமாரி தாக்கு
கொல்கத்தா: டெல்லி செங்கோட்டையில் இந்த ஆண்டு பிரதமர் ஆற்றும் சுதந்திர தின உரைதான், பிரதமராக அவர் ஆற்றும் கடைசி சுதந்திர தின உரை என மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு சவால் விட்டிருக்கும் நிலையில் மமதாவின் கருத்து சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
77வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகள், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம், பொருளாதாரம் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் நாடு எட்டிய உயரம் குறித்து பிரதமர் மோடி பெருமையாக பேசினார். மேலும், அடுத்த ஆண்டும் நான் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியிருந்த கருத்துகள் தற்போது டிரென்டாகி வருகிறது. அதாவது சுதந்திர தினவிழாவையொட்டி நேற்று மேற்கு வங்க மாநிலம் பெகாலாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சிறப்புரையாற்றி மமதா, "எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி களத்தில் இறங்கி நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்தும். டெல்லி செங்கோட்டையில் இந்த முறை நரேந்திர மோடி ஆற்றும் உரை, பிரதமராக அவர் ஆற்றும் கடைசி சுதந்திர தின உரையாக இருக்கும்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றும். நாடு முழுவதும் பாஜக வீழ்த்தப்படுவதை போல மேற்கு வங்கத்திலும் பாஜக வீழ்த்தப்படும். ரபேல் போன்ற விவகாரங்களில் பாஜக மீது ஊழல் கறை படிந்திருக்கிறது. மேற்கு வங்காளத்திலும் பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதன் மீது நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாஜக வீழ்த்தப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த அளவில் பிரதமராகும் ஆசை எனக்கில்லை" என்று கூறியுள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கும், 'இந்தியா' கூட்டணிக்கும் மிகவும் முக்கியமான தேர்தலாகும். பாஜக வெற்றி பெற்றால் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்பார். இதனால் நேருவுக்கு பின்னர் தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்கிற பெருமை இவருக்கு சேரும். அதேபோல பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழாவும் 2025ம் ஆண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.
ஏற்கெனவே தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கடந்த முறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் சென்றுதான் தடை விலக்கு பெற்று பேரணி நடத்தப்பட்டது. இப்படி இருக்கையில் நூற்றாண்டு விழா வரும்போது ஆட்சியில் இல்லையெனில் பேரணி மட்டுமல்ல சின்ன சின்ன நிகழ்ச்சிகளை நடத்துவது கூட பெரும்பாடாகிவிடும். எனவேதான் பாஜக 2024 தேர்தலில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று முயன்று வருகிறது.

இதே நிலைதான் காங்கிரசுக்கும். ஏற்கெனவே இக்கட்சிக்குள் இருந்த முக்கிய தலைவர்கள் வெளியேறிவிட்டனர். அதேபோல கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர் தோல்வி, பஞ்சாப், டெல்லி உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி என வட மாநிலங்களில் காங்கிரஸின் கை சுருங்கி வருகிறது. எனவே கட்சி மீது தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்த இந்த நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக ஜெயித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் கங்கணம் கட்டி வருகிறது. இதனால் பெரிதும் முரண்பட்ட ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட காங்கிரஸ் சமரசம் செய்துக்கொண்டுள்ளது.
மமதாவை பொறுத்த வரையில் மேற்கு வங்கத்தில் சிபிஎம்-ஐ பின்னுக்கு தள்ளி ஆட்சிக்கு வந்தாலும், அக்கட்சியை விட இவர்களுக்கு பாஜகதான் அதிக குடைச்சல் கொடுத்து வருகிறது. எனவே பாஜக மீது தொடர் குற்றச்சாட்டுகளை மமதா வைத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாகதான் தற்போது மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications