எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியை தெருவில் விரட்டி விரட்டி ஒரு தரப்பினர் தாக்கியதோடு, அவர் மீது முட்டைகளை வீசியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் அபிஷேக் பானர்ஜி காயமடைந்த நிலையில் அவரை பாதுகாவலர்கள் அங்கிருந்து வேகமாக அழைத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தை போல் கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. முதல்வராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்தார். அதோடு அவரது கட்சி ஆட்சியை இழந்தது. பாஜக அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 207 தொகுதிகளில் வென்று அபார வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜக ஆட்சி அமைத்தது. புதிய முதல்வர் பாஜகவின் சுவேந்து அதிகாரி பதவியேற்றார். ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் தளபதியாக இருந்த சுவேந்து அதிகாரி இந்த தேர்தலில் அவரையே தோற்கடித்து பாஜகவில் முதல்வராகி உள்ளார்.
இந்நிலையில் தான் சட்டசபை தேர்தலின்போது மேற்கு வங்க மாநிலத்தின் சில இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக சோனர்பூரில் நடந்த வன்முறையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்திக்க மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி சென்றார். அவரை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
இந்த சமயத்தில் ஒரு தரப்பினர் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக கோஷமிட்டனர். 'திருடன்.. திருடன்..' என்று கோஷமிட்டதோடு அபிஷேக் பானர்ஜியை தாக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாவலர்கள் அபிஷேக் பானர்ஜிக்கு ஹெல்மெட் வழங்கினார். இதனால் கோபமடைந்தவர்கள் அவர் மீது முட்டைகளை வீசியதோடு, அவரை நெருங்கி வந்து தாக்கினார். பாதுகாவலர்கள் அபிஷேக் பானர்ஜியை அங்கிருந்து வேகமாக இழுத்து சென்றாலும் ஆத்திரம் அடங்காதவர்கள் அவரை விரட்டி விரட்டி தாக்கினர். இதில் அபிஷேக் பானர்ஜி காயமடைந்தார்.
चुनाव के वक्त हमलो में पीडीत लोगों से मिलने #TMC नेता अभिषेक बॅनर्जी सोनारपूर में पहुँचे ! वहां पर उनपर हमला हुआ ! अभिषेक बॅनर्जी ने कहा की ये बीजेपी स्पॉन्सर्ड हमला है ! #WestBengal #MamataBanerjee #BJP pic.twitter.com/aXlPQYFRUH
— Ramraje Shinde (@ramraje_shinde) May 30, 2026
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர வைத்துள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் பாஜகவினர் உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. பாஜகவினர் தான் திட்டமிட்டு அபிஷேக் பானர்ஜியை தாக்கி உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ''ஆட்சியாளர்கள் கொலையாளிகளாக மாறி உள்ளனர். பாஜகவிற்கு இது வெட்கக்கேடு'' என்று கண்டிததுள்ளது.
இதுபற்றி தாக்குதலுக்கு உள்ளான அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ''இந்த சம்பவத்தின் பின்னணியில் பாஜக தான் உள்ளது. இதனை இது முழுக்க முழுக்க பாஜக தான் ஏற்பாடு செய்துள்ளது. தாக்குதல்காரர்கள் என்னை கொல்ல முயன்றனர். இவை அனைத்தும் கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை நீதிமன்றம், ஆளுநரிடம் காண்பிப்போம். என் உடைகளை கிழித்து கண்ணாடியை உடைத்துவிட்டனர். இதுதான் பாஜகவின் ஜனநாயகம். ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. இங்கு எங்கும் காவல்துறையை காணவில்லை'' என்று குற்றம்சாட்டி உள்ளார்.
தற்போது தாக்குதலுக்கு உள்ளான அபிஷேக் பானர்ஜி மம்தா பானர்ஜியின் மருமகன் ஆவார். அதாவது மம்தா பானர்ஜியின் உடன் பிறந்த சகோதரர் அமித் பானர்ஜியின் மகன் தான் இந்த அபிஷேக் பானர்ஜி . இவர் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக உள்ளார். அதுமட்டுமின்றி மேற்கு வங்க மாநிலத்தின் டைமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக உள்ளார். இவர் தான் மம்தா பானர்ஜியின் அடுத்த அரசியல் வாரிசாக இருக்கும் நிலையில் அவர் மீது இன்று ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications