இதென்ன புது கதையா இருக்கே... சந்திரபாபு நாயுடுவை பிரசாந்த் கிஷோர் சந்திக்க காரணமே மமதா பானர்ஜியாம்?
விசாகப்பட்டினம்: ஆந்திரா அரசியலில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் பயணம் பெரும் பேசு பொருளாகி இருக்கிறது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவுடன் பிரசாந்த் கிஷோர் கை கோர்க்கிறார் என கூறப்படும் நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்களோ புதிய காரணங்களை முன்வைத்து பரபரப்பை கிளப்புகின்றனர்.
ஆந்திரா சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆந்திரா அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஜரூராக இறங்கி உள்ளன. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திரா சட்டசபை தேர்தலில் பெரும்பாலான சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் தரமாட்டார் என கூறப்படுகிறது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் கொடுத்து தோல்வியை தழுவியதை முன்னுதாரணமாக கொண்டு ஜெகன் இத்தகைய அதிரடி முடிவெடுத்திருக்கிறார் என்கின்றன தகவல்கள்.

பாஜக அணியில் நாயுடு?: இன்னொரு பக்கம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கூட்டணி அமைத்துள்ளது. ஜனசேனாவோ, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கிறது. இதனால் சந்திரபாபு நாயுடுவும் பாஜக கூட்டணியில் இணைவாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆந்திராவில் பிரசாந்த் கிஷோர்: இந்த நிலையில் திடீரென தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் ஆந்திராவுக்கு வருகை தந்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆந்திராவில் அசைக்க முடியாத பெரும் சக்தியாக உருவெடுத்து நிற்கும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்தவே சந்திரபாபு நாயுடு பிரசாந்த் கிஷோரை களமிறக்கி இருக்கிறார் என்கின்றன ஆந்திரா தகவல்கள்.
6 பிரசாந்த் கிஷோர்களுக்கு சமம்: ஆனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமைச்சர்களோ, எங்கள் ஜெகன் மோகன் அண்ணா, 6 பிரசாந்த் கிஷோர்களுக்கு சமம்; யாரை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது ஜெகன் அண்ணாவுக்கு தெரியும். தேர்தல் வியூகங்களில் ஜெகன் மோகன் ரெட்டியை யாராலும் வீழ்த்த முடியாது. எத்தனை பிரசாந்த் கிஷோர்கள் வந்தாலும் ஆந்திராவில் மீண்டும் ஜெகன் அண்ணாதான் ஆட்சி அமைப்பார் என்கின்றனர்.
"இந்தியா" கூட்டணிக்கு வலை?: அதே நேரத்தில், பிரசாந்த் கிஷோர் வருகை குறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் வேறு ஒரு கருத்தையும் முன்வைக்கின்றனர். அதாவது சந்திரபாபு நாயுடுவை பாஜக கூட்டணியில் சேர்க்க ரொம்பவே தயக்கம் காட்டுகிறது. கடந்த காலங்களில் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் இழிவாகப் பேசியவர் சந்திரபாபு நாயுடு என்கிற கோபம் இருக்கிறது. டெல்லி மேலிடம் கூட சந்திரபாபு நாயுடுவை கூட்டணியில் சேர்க்க நினைத்தாலும் ஆந்திராவில் கடும் எதிர்ப்பு இருக்கிறது. இதனால் சந்திரபாபு நாயுடுவை எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்குள் இழுக்க முயற்சிகள் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் அனுப்பி வைத்தார்."இந்தியா" கூட்டணியில் இணைய வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தவே பிரசாந்த் கிஷோர் ஆந்திரா வந்தார் என்கின்றனர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள்.












Click it and Unblock the Notifications