பழங்குடியின பெண்களின் வீடியோ களங்கம் ஏற்படுத்திவிட்டதாம்.. போராட்டத்தில் இறங்க மணிப்பூர் முதல்வர்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியிருந்த நிலையில், மாநில அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தானும் போராட்டத்தில் ஈடுபட போவதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறியுள்ளார்.
மணிப்பூரில் சிறுபான்மையினராக இருக்கும் குக்கி, ஜோ, நாகா உள்ளிட்ட பழங்குடி மக்கள் அங்குள்ள மலை பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலைப்பகுதி மற்றும் அதையொட்டியுள்ள சமவெளி பகுதிகளில் இவர்களை தவிர வேறு யாரும் நிலங்களை வாங்கவோ விற்கவோ முடியாது. இப்படி இருக்கையில் அங்கு பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

மைத்தேயி/மெய்டெய் மக்களுக்குதான் மாநிலத்தில் அதிக அளவுக்கு வாக்குகள் இருக்கிறது. எனவே இதனை கவனித்த பாஜக அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புக்கொண்டது. இதையே தனது தேர்தல் வாக்குறுதியாக வைத்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. எதிர்பார்த்ததை போலவே பாஜக இந்த தேர்தலில் வெற்றியும் பெற்றது. இதனையடுத்து மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
நீதிமன்றமும் இதற்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் குக்கி உள்ளிட்ட பழங்குடி மக்கள் அதிருப்பதியடைந்தனர். மைத்தேயி/மெய்டெய் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் தங்கள் உரிமைகளை இழக்க நேரிடும் என்று விமர்சித்து இப்பழங்குடி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், இதற்கு எதிராக மைத்தேயி/மெய்டெய் மக்கள் ஊர்வலம் பேரணி நடத்தினர். இது ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது.
மோதலில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து மே மாதமே புகார் அளிக்கப்பட்டும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வீடியோ வெளியான பின்னர் அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்ததையடுத்து குற்றவாளிகள் 62 நாட்களுக்கு பின்னர் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும் என்றும், முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலுக்கு பதிலளித்த பிரேன் சிங், "மாநிலத்தில் அமைதியை கொண்டுவருதே முதல் வேளை என்று கூறியுள்ளார்". மேலும், "எல்லா சமூகத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள். இருப்பினும் நாங்கள் அவரை விட்டுவிடமாட்டோம். அதேபோல மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வீடியோ தொடர்பாக, மாநிலம் தழுவிய கண்டனப் போராட்டங்களை நடத்த இருக்கிறோம்.
மணிப்பூர் சமூகம் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரானது. பெண்களை தாயாக கருதுகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்க அரசுக்கு ஆதரவாக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications