மணிப்பூர் பெண்கள் நிர்வாண கொடூரம்: கிழக்கு குஜராத்தில் இன்று பழங்குடிகள் முழு அடைப்பு போராட்டம்!
அகமதாபாத்: மணிப்பூரில் குக்கி பழங்குடி இனப் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக அழைத்துச் சென்ற கொடூரத்தைக் கண்டித்து குஜராத் மாநிலத்தில் பழங்குடிகள் பெரும்பான்மையினராக வாழும் மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பழங்குடிகளுக்கு எதிரான தொடரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. மத்திய பிரதேசத்தில் பழங்குடி இன இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாஜக பிரமுகரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி பழங்குடிகளுக்கு எதிராக மைத்தேயி இனக்குழுவினர் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குக்கி பழங்குடி இனப்பெண்களை கூட்டுப் பலாத்காரம் செய்து நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம் உலகை பேரதிர்ச்சி அடைய வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனாலும் மணிப்பூரின் இந்த பயங்கர துயரம் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மணிப்பூரின் இத்தகைய கொடூர சம்பவங்களை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தில் பழங்குடிகள் பெரும்பான்மையினராக வாழும் கிழக்கு மாவட்டங்களில் இன்று மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications