"தலித் துணை முதல்வர்".. இங்கே இல்லை.. மாயாவதியின் முழக்கத்தால் ஹரியானாவில் அதிரும் காங்கிரஸ், பாஜக!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களே (அக்டோபர் 5) இருக்கும் நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய தேசிய லோக் தள் கூட்டணி முன்வைத்திருக்கும் "நாங்கள் வென்றால் தலித் ஒருவரை துணை முதல்வராக்குவோம்" என்ற முழக்கம் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் தேதி நடைபெற உள்ளது. ஹரியானா தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் படுதீவிரமாக இறங்கி உள்ளன.

ஹரியானாவில் 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிராக மிகப் பெரும் அதிருப்தி அலை வீசுகிறது. இதனை சமாளிக்க மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை முன்வைத்து பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியோ எப்படியும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்கிற மிதப்பில்தான் இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரை பிரசாரத்தில் கவனம் செலுத்துவதை விட யாருக்கு முதல்வர் பதவி என்கிற போட்டியில்தான் தீவிரம் காட்டுகின்றனர்.
காங்கிரஸுக்கு கிடைக வேண்டிய பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க ஆம் ஆத்மி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ்- இந்திய தேசிய லோக் தள் கூட்டணி ஆகியவையும் களத்தில் தீவிரம் காட்டுகின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில் பகுஜன் சமாஜ் கட்சி, அதன் தலைவர் மாயாவதிக்கு ஹரியானா தேர்தலில் அதீத முக்கியத்துவம் இந்த முறை கிடைத்து வருவதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி- இந்திய தேசிய லோக் தள் கட்சிகள் தலித் மற்றும் ஜாட் வாக்குகளை குறிவைத்தே களம் காண்கின்றன. அதுவும் மாயாவதி முன்வைத்த அதிரடி முழக்கமான "துணை முதல்வர்கள்" பதவி ஆதிக்கம் செலுத்தும் ஜாதிகளிடையே சலசலப்பையும் ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய தேசிய லோக் தள்- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வென்றால், லோக் தள் கட்சியின் அபய் சவுதாலாதான் முதல்வர் என அறிவித்ததுடன், ஒரு தலித் துணை முதல்வர், பிற்படுத்தப்பட்ட அல்லது முற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த மற்றொரு துணை முதல்வர் நியமிக்கப்படுவர் எனவும் பிரகடனம் செய்தார்.
ஹரியானா தேர்தல் களத்தில் பகிரங்கமாக துணை முதல்வர்கள் பதவி குறித்து எந்த கட்சியும் எந்த ஒரு நிலைப்பாட்டையும் வைக்காத நிலையில் மாயாவதி கூட்டணி இப்படி பிரசாரம் செய்வது கவனத்தைப் பெற்றுள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். கடந்த தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்ற தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி இந்த முறை கூடுதல் கவனம் செலுத்தி பிரசாரம் செய்வதும் கவனிக்க வைத்திருக்கிறது. மாயாவதியின் இந்த வியூகமும் முழக்கங்களும் காங்கிரஸ், பாஜகவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications