“மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
காந்திநகர்: குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இன்று ரகசிய தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ. 300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCB) மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) இணைந்து இன்று நடத்திய கூட்டு நடவடிக்கையில் போதைப்பொருட்களை தயாரித்து வந்த மூன்று தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள "மியாவ் மியாவ்" எனப்படும் மெபெட்ரோன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து செயல்படும் ரகசிய மெபெட்ரோன் போதைப்பொருள் தயாரிப்பு குறித்து குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு ரெய்டு நடத்த குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு ஆகியவற்றின் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
போதைப்பொருள் நெட்வொர்க்கில் தொடர்புடைய நபர்கள், போதைப்பொருள் தயாரிக்கப்படும் ரகசிய லேப்களின் இருப்பிடங்களை தீவிரமாக கண்காணித்து இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீஸார் உதவியுடன், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (NCB) அதிரடி வேட்டை நடத்தினர்.

ஒரே நேரத்தில் ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மால், ஜோத்பூர் மாவட்டம் ஒசியான் மற்றும் குஜராத் மாநிலம் காந்திநகர் ஆகிய 3 இடங்களில் சோதனை நடத்தினர். அங்கு போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். மொத்தம் 149 கிலோ மெபெட்ரோன் (தூள் மற்றும் திரவ வடிவில்), 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் மதிப்பு ரூ. 300 கோடி எனக் கூறப்படுகிறது. இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் தயாரிப்பு கும்பலின் தலைவன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காந்தி நகரில் பிடிபட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குஜராத் மாநிலம் அம்ரேலியில் மற்றொரு இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது, அங்கு சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அங்கும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.
4-மெத்தில் மெத்காதினோன், 4-எம்எம்சி, மற்றும் 4-மெத்திலிபெட்ரோன் என்றும் அறியப்படும் மெபெட்ரோன், ஆம்பெடமைன் மற்றும் கேத்தினோன் ஆகிய செயற்கை ஊக்க மருந்துகள் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் லேப்களில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் அவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து தயாரிப்பு பொருட்கள் போதைப்பொருள் மார்க்கெட்டில் ட்ரோன், எம்-கேட், ஒயிட் மேஜிக், மியாவ் மியாவ் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications