விரைவில் தமிழக முதல்வராக வர வேண்டும்... மு.க.ஸ்டாலினுக்கு ஜெகன்மோகன் வாழ்த்து
Recommended Video
விஜயவாடா: தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் விரைவில் பதவியேற்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன், ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில், மொத்தம் உள்ள, 175 தொகுதிகளில், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து, விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. மைதானத்தில் சுமார் 40, 000 அதிகமானோர் திரண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரத்துக்கு இடையே ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.

அரங்கம் அதிர்ந்தது
நண்பகல் 12 மணி 23 நிமிடங்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன், பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டியாகிய நான் என ஜெகன் மோகன் சொன்னதும், தொண்டர்களின் உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பால் இந்திராகாந்தி மைதானமே சில நிமிடங்கள் அதிர்ந்தது.

ஜெகன்மோகனுக்கு பரிசு
இந்த பதவியேற்பு விழாவில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெகன்மோகனுக்கு, சந்திரசேகரராவ் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின், கருணாநிதி எழுதிய புத்தகத்தை, ஜெகன்மோகனுக்கு பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

முதியோர் ஓய்வூதியம் உயர்வு
ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட ஜெகன் மோகன், 1,000 ரூபாயாக இருந்த முதியோர் ஓய்வூதியத்தை 2, 250 ரூபாயாக உயர்த்தும் உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த தொகை அடுத்த ஆண்டில் 2,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து
விழாவில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் தமிழக முதலமைச்சர் ஆவார் என கூறினார்.விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் ஆந்திர மக்களுக்கு தெலுங்கு மொழியில் தனது வணக்கங்களை தெரிவித்து ஜெகன் மோகனை வாழ்த்தினார்.
|
ஜுன் 7-ம் தேதி பதவியேற்பு
அனைத்து மதத்தலைவர்களின் வழிபாட்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து விழா முடிவுக்கு வந்தது. விழாவில் ஜெகன்மோகன் தவிர்த்து வேறு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை உறுப்பினர்கள் ஜுன் 7-ம் தேதி பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications