அவனை நம்பி 2 குழந்தை இருக்கு.. வேலைக்காக சென்னை போனான்: ரயில் விபத்தில் மகனை பறிகொடுத்த தாய் கண்ணீர்
கொல்கத்தா : ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில், தனது மகனை பறிகொடுத்து கண்ணீர் விட்டுள்ளார் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி. 26 வயதான தனது மகன் சென்னைக்கு வேலைக்குச் சென்றபோது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்தில், சரக்கு ரயில் மற்றும் இரண்டு பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் பயணிகள் பலர் இறந்தது மட்டுமின்றி 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே தடம் புரண்டு நின்ற யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது, ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தடம் புரண்டு, பக்கத்தில் சரக்கு ரயிலின் மீது மோதியதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன.
இந்தக் கோர விபத்தில் இதுவரை 268 பேர் உயிரிழந்தனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒடிசாவில் நடைபெற்ற இந்தக் கோர விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் விபத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தங்களின் அனுபவத்தை பதற்றத்தோடு வெளிப்படுத்தி வருகின்றனர். பலர் தாங்கள் பயணித்த பெட்டிகளிலேயே கை, கால்களை இழந்து கதறித் துடித்த காட்சியை விவரித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி, ரயில் விபத்தில் தனது மகனைப் பறிகொடுத்துவிட்டுக் கலங்கிப் போயுள்ளார். சென்னைக்கு வேலைக்குச் சென்ற மகனை இந்த ரயில் விபத்தில் பறிகொடுத்துள்ளார் அப்பெண்மணி.
"என் மகன் சென்னைக்கு வேலைக்குச் சென்றான். நேற்று ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்துவிட்டான். என் மகனுக்கு 26 வயதாகிறது. அவனை நம்பி 2 குழந்தைகள் உள்ளன. இப்போது எங்கள் குடும்பமே நடுத்தெருவில் நிற்கிறது" என வேதனையோடு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications