அஸ்ஸாம் ஆளுநராக மத்திய அமைச்சர் நஜ்மா? அமைச்சரவையில் மெஹ்பூபா?
டெல்லி: மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சராக இருக்கும் நஜ்மா ஹெப்துல்லா விரைவில் விடுவிக்கப்பட்டு, அஸ்ஸாம் மாநில ஆளுநராக நியமிக்கப்படக் கூடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அமைச்சரவையில் அதிகபட்சமாக 75 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருதுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நஜ்மா ஹெப்துல்லாவிற்கு கடந்த ஏப்ரல் 13-ந் தேதி 75 வயதானது. இதைக் கருத்தில் கொண்டு அவரை அமைச்சரவையில் இருந்து விடுவித்து அஸ்ஸாம் மாநில ஆளுநராக நியமிக்கும் யோசனையை நரேந்திர மோடி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார்.
மேலும் நஜ்மாவை ஆளுநராக நியமிப்பதன் மூலம் அஸ்ஸாம் முஸ்லிம்களை தங்கள் பக்கம் இழுக்க முடியும் எனவும் பாரதிய ஜனதா கருதுவதாகவும் கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு மத்திய அமைச்சரவையில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு பிரதிநிதித்துவம் அளிக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.பி.யும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சையதின் மகளுமான மெஹ்பூபா முஃப்தியை சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்க நரேந்திர மோடி பரிசீலித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications