பச்சி பறக்குது? பாஜக அணி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,'சர்ச்சை' அதானியை திடீரென சந்தித்த சரத்பவார்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசியலில் எந்த நேரத்தில் எது நடக்கும் என யாருமே கணிக்க முடியாது என்பது ஒவ்வொரு நாளும் நிரூபணமாகி வருகிறது. உத்தவ் தாக்கரே வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருக்கும் போது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து நாசமாக்கி ஏக்நாத் ஷிண்டே மூலம் பெருமளவு எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சி அமைத்துள்ளது பாஜக. ஆனால் இந்த கூட்டணி எத்தனை நாளைக்கு தாங்கும் என்பதுதான் எல்லோரது கேள்வி. இதற்கு ஏற்ப, லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டை முன்வைத்து பாஜக- ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா தலைவர்களிடையே அடிதடி தொடங்கிவிட்டது.

பாஜகவோ, ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவையே கழற்றிவிட்டு என்சிபியின் அஜித்பவார் தலைமையில் ஒரு அதிருப்தி கோஷ்டியை உருவாக்கி இன்னொரு புதிய ஆட்சி அமைக்க கணக்குப் போட்டது. இதனை கண்டு கொந்தளித்த சரத்பவார், என்சிபி எனும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியே வேண்டாம் என அறிவித்தார். பின்னர் ஒருவழியாக சரத்பவார் சமாதானமாகி தமது அறிவிப்பை வாபஸ் பெற்றார்.
அத்துடன் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்களை முந்தைய உத்தவ் தாக்கரே அரசு தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் ஷிண்டே கோஷ்டிக்கு தலைக்கு மேலே கத்தி தொங்குகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் புதிய குழப்பம் எந்த நிமிடத்திலும் உருவாகும் என்பது களநிலவரம்.

இதனை உறுதி செய்யும் வகையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். இது முழுமையாக தனிப்பட்ட சந்திப்பு; அரசியலுக்கும் இதற்கும் துளியுமே தொடர்பு இல்லை என இருதரப்பும் சத்தியம் அடித்து சொல்கின்றனர். ஆனால் உத்தவ் தாக்கரே வெளிநாடு சென்றுள்ள நிலையில் நடந்துள்ள இந்த சந்திப்பு நெருப்பில்லாமல் புகையுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதானி சந்திப்பு: ஏக்நாத் ஷிண்டேவுடனான சந்திப்பை தொடர்ந்து சர்ச்சைக்குரிய தொழிலதிபர் கவுதம் அதானி, சரத்பவாரை சந்தித்தார். சிங்கப்பூரில் இருந்து வந்த தொழில்துறை குழுவினர் அதானியை சந்திக்க விரும்பியதால் இந்த சந்திப்பு நடைபெற்றது; அதற்கு மேல் இதில் எதுவும் இல்லை என்றார் சரத்பவார். ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்னரும் அதானியை சரத்பவார் சந்தித்து பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. என்னமோ நடக்குதய்யா!












Click it and Unblock the Notifications