+2 தேர்வில் 55 மார்க்! ஆனா நீட் தேர்வில் டாப்பர்.. வினாத்தாள் லீக் சர்ச்சை! அதிர்ச்சி பின்னணி அம்பலம்
ஜெய்ப்பூர்: நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் ஒட்டுமொத்தத் தேசத்தையும் உலுக்கி வரும் நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிவால் குடும்பத்தின் கதை, ஒரு க்ரைம் த்ரில்லர் சினிமா பாணியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொதுத் தேர்வில் குறைவான மார்க் பெற்ற மாணவர்களும் கூட நீட் தேர்வில் அதிக மார்க் பெற்றுள்ளனர். இதனால் நீட் வினாத்தாள் கடந்த காலங்களிலும் லீக் ஆகி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதலே இந்தியாவில் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாக நீட் குறித்த சர்ச்சை அதிகரித்து வருகிறது. இந்தாண்டு நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விஷயம் பூதாகரமாகவே வெடித்தது. இதனால் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் விவகாரம்
இந்த நீட் வினாத்தாள் லீக் தொடர்பாக சிபிஐ இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ் மற்றும் மாங்கிலால் பிவால் ஆகிய இருவரும்தான் இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் எனச் சொல்லப்படுகிறது.. தங்களது குடும்பத்துப் பிள்ளைகள் எப்படியாவது டாக்டராக வேண்டும் என்பதற்காக, நீட் வினாத்தாளைப் பல லட்சங்கள் கொடுத்து வாங்கியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு (2025) மட்டும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகள் நீட் தேர்வில் பாஸ் செய்து, பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். பள்ளியில் சுமாராகப் படிக்கும் இந்த மாணவர்கள், பொதுத் தேர்விலும் கூட குறைவான மார்கை பெற்றிருந்தனர். ஆனால், நீட் தேர்வில் திடீரென 'டாப்பர்'களாக மாறியதுதான் சிபிஐக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் மாணவர்கள்
விகாஸ் என்ற மாணவர் பொதுத் தேர்வில் 55% மார்கை மட்டுமே பெற்றிருந்த நிலையில், நீட் தேர்வில் 86% பெற்றிருக்கிறார். இவர் இப்போது சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்து பாலக் என்ற மாணவர் பொதுத் தேர்வில் 89% மார்க் பெற்ற நிலையில், நீட் தேர்வில் 98.61% மார்க் பெற்றுள்ளார். இவர் ஜெய்ப்பூர் எஸ்எம்எஸ் கல்லூரியிலிருந்து தலைமறைவு ஆகியுள்ளார்.
அடுத்து சானியா.. பொதுத் தேர்வில் 89% மார்க் பெற்ற இவர், நீட் தேர்வில் 94.07% மார்க் பெற்றிருந்தார். இவரும் இப்போது தலைமறைவாகியுள்ளார். குஞ்சன் என்ற மாணவர் பொதுத் தேர்வில் 70% மார்க் பெற்ற நிலையில், நீட் தேர்வில் 92.53% மார்க் பெற்று, வாரணாசி கல்லூரியிலிருந்து தலைமறைவாகியுள்ளார். பிரகதி என்ற மாணவியும் இதேபோல நீட் தேர்வில் 89% மார்க் பெற்றிருந்தார். அவரும் இப்போது தலைமறைவாகியுள்ளார்.
சர்ச்சை
சவாய் மாதோபூர் மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு படித்து வந்த விகாஸ் பிவால், கடந்த ஜனவரி முதல் கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்லவில்லையாம். மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே கல்லூரிக்கு வந்துள்ளார். கல்லூரியில் நடந்த தேர்வுகளில் இவரது சராசரி மதிப்பெண் வெறும் 30% மட்டுமே! 12ம் வகுப்பில் 55% எடுத்த இவருக்கு நீட் தேர்வில் 86% கிடைத்தது எப்படி என்பதே இப்போது சிபிஐ அமைப்பின் கேள்வியாக உள்ளது. கடந்த மே 13ம் தேதி இவரும் இவரது தந்தை தினேஷும் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், மற்றொரு மாணவியான, கோச்சிங் சென்டர்களில் நடந்த மாதிரித் தேர்வுகளில் 720-க்கு வெறும் 320 முதல் 342 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து வந்துள்ளார். ஆனால், நீட் தேர்வில் 92.53% வாங்கியுள்ளார். தற்போது விகாஸைத் தவிர மற்ற 4 பேரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது.
வசமாகச் சிக்கினர்
கடந்த ஆண்டு 5 பேரை மெடிக்கல் படிப்பில் சேர வைத்த தைரியத்தால், இந்த ஆண்டும் தங்களது மகன்களான ரிஷி (12ம் வகுப்பில் 50% மார்க் வாங்கி பாஸ் செய்தவர்) மற்றும் அமன் ஆகிய இருவரையும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத வைத்துள்ளனர். ஆனால், அதற்குள் நீட் விவகாரம் பெரிதாக வெடிக்கவே சிபிஐ முந்திக்கொண்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இரவும் பகலும் கண்விழித்துப் படித்து, நூலிழையில் மருத்துவக் கனவைத் தொலைக்கும் ஏழை மாணவர்களின் மத்தியில், வினாத்தாள் வாங்கி நீட் தேர்வு முறையைச் சிதைக்கும் இதுபோன்ற நபர்கள் மீது மிகக் கடுமையா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications