இறக்கை முனை தரையில் மோதி கவிழ்ந்தது.. நேபாள விமான விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய ஷாக் தகவல்!
காத்மாண்டு: நேபாளத்தில் 19 பேருடன் புறப்பட்ட விமானம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 18 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ள நிலையில் இந்த விபத்து நடந்தது எப்படி என்பது பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்காராவுக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 11 மணியளவில் புறப்பட்டது. 19 பயணிகளுடன் சென்ற இந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து சறுக்கி, தரையில் மோதியது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

18 பேர் பலி: முதற்கட்ட தகவலின்படி, விமானத்தில் பயணித்த 19 பேரில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தீயை அணைத்து பயணிகளை மீட்க தீயணைப்பு படையினர் துரிதமாக ஈடுபட்ட நிலையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்றதை அடுத்து, திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இந்த விமான விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கேப்டன் மீட்பு: பொக்காரா நோக்கிச் சென்ற விமானம் புறப்படும்போது ஓடுபாதையில் இந்த விபத்து ஏற்பட்டதாக டிஐஏ செய்தித் தொடர்பாளர் சுபாஷ் ஜா தெரிவித்துள்ளார். விமானத்தின் கேப்டன் எம்.ஆர். ஷக்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று ஜா கூறி உள்ளார்.
நேபாள நாட்டிற்குள் உள்நாட்டு விமானங்களை இயக்கும் சௌர்யா ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் விமானம், இரண்டு பணியாளர்கள் மற்றும் 17 டெக்னீஷியன்களுடன் போக்காரா நகருக்கு பராமரிப்பு சோதனைகளுக்காக சென்றதாக விமான நிலைய பாதுகாப்புத் தலைவர் அர்ஜுன் சந்த் தாக்குரி தெரிவித்துள்ளார்.
இறக்கை முனை தரையில் மோதியது: விமானம் ஓடுபாதையின் தெற்கு முனையில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்ததாகவும், மேலே கிளம்பும்போது திடீரென விமானத்தின் இறக்கை முனை, ஓடுபாதை தரையில் மோதியதால் உடனடியாக விமானம் கவிழ்ந்ததுமே உடனடியாக தீப்பிடித்து எரிந்தது என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர்.
பின்னர் விமானம் புத்தா ஏர் ஹேங்கருக்கும் ரேடார் நிலையத்திற்கும் இடையே ஓடுபாதையின் கிழக்குப் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. விமானம் தீப்பிடித்து மிகப்பெரிய அளவில் ஜுவாலையுடன் எரிந்ததால் அப்பகுதியில் அடர்ந்த புகைமூட்டம் நிலவியது.












Click it and Unblock the Notifications