ஒடிசா முதலமைச்சரின் திடீர் உத்தரவு... 20 அமைச்சர்கள் உடனே ராஜினாமா - அடுத்து என்ன?
புவனேஷ்வர்: ஒடிசாவில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் நவீன் பட்னாயக் உத்தரவிட்டதை தொடர்ந்து 20 அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளனர்.
ஒடிசாவில் நவீன் பட்னாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசு ஆட்சிக்கு வந்து மே 29 ஆம் தேதியுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இந்த நிலையில் ஒடிசாவில் தற்போதைய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாகவே பரவி வந்தது.

இருப்பினும் ஒடிசாவில் சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக இதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பிஜு ஜனதா தளம் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து இன்று அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயக் அனைத்து அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்.
இதனை ஏற்று ஒடிசா சட்டப்பேரவை சபாநாயகரிடம் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். அதன் தொடர்ச்சியாக நாளை காலை 11:45 மணியளவில் ஒடிசா ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது.
இந்த புதிய அமைச்சரவையில் எம்.எல்.ஏக்கள் பிரதீப் அமத் மற்றும் லதிகா பிரதான் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை மையமாக வைத்தே நவீன் பட்னாயக் புதிய அமைச்சரவை முடிவை எடுத்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications