குடியரசுத் தலைவர் தேர்தல்.. மண்ணின் மகளுக்கு ஆதரவில்லை.. முர்முவை எதிர்க்கும் ஒடிசா காங்.. விளக்கம்!
புவனேஷ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் மண்ணின் மகளான திரெளபதி முர்முவை தாங்கள் ஏன் ஆதரிக்கவில்லை என்று ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் குடியரசுத் தலைவராக இப்போது ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில், வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் 15ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சரத் பவார், ஃபரூக் அப்துல்லா மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டோருடன் எதிர்க்கட்சிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அவைவரும் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஒடிசா மாநிலத்தின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.

வேட்பு மனுத்தாக்கல்
ஜூன் 29ஆம் தேதியுடன் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்தநிலையில் பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் பங்கேற்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சென்று சென்றுள்ளார்.

திரெளபதி முர்முவுக்கு ஆதரவில்லை
இதனிடையே பாஜக கூட்டணி சார்பாக குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டதையடுத்து, மாநில சட்டப்பேரவையில் உள்ள அனைத்து கட்சிகளும் திரெளபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மண்ணின் மகளாக இருந்தாலும், திரெளபதி முர்முவை ஆதரிக்க மாட்டோம் என்று ஒடிசா மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒடிசா காங்கிரஸ் தரப்பில் கூறுகையில். என்னதான் திரெளபதி முர்மு மண்ணின் மகளாக இருந்தாலும், அவர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். இந்த சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் தான் மகாத்மா காந்தியை கொலை செய்தது. அதனால் ஒருபோதும் காங்கிரஸ் கட்சி பாஜக வேட்பாளரை ஆதரிக்காது என்று தெரிவிக்கப்பட்டது.

சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி
அதேபோல் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக, திரெளபதி முர்முவின் பழங்குடியின பின்னணியை முன்னிலைப்படுத்துகிறது. குடியரசுத் தலைவர் பதவி என்பது அனைத்து பிரிவினரின் உணர்வுகளையும், பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கக்கூடியது. அதுமட்டுமல்ல, குடியரசுத் தலைவர் தேர்தல், 2 நபர்களுக்கு இடையிலான போட்டி அல்ல. அது 2 சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.












Click it and Unblock the Notifications