Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உருளை கிழங்கை வைத்தும் ஒரு அரசியல் நடக்குது! ஒடிசா+மேற்கு வங்கம்+உபி.. இங்க பாருங்க பாஜக நிலைமையை!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: இந்தியாவில் பொதுவாக 'வெங்காய அரசியல்'தான் பேசுபொருளாக இருக்கும்.. வெங்காய விலை விவகாரத்தில் இந்திய அரசியலின் தலைவிதிகளே மாறி இருக்கின்றன. அவசரநிலையை அமல்படுத்தி மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்திரா காந்தி அம்மையார் மீண்டும் ஆட்சியை பிடிக்க வெங்காய விலை உயர்வும் காரணமாக இருந்தது. 1998-ல் டெல்லியில் பாஜக ஆட்சியை பறிகொடுக்க காரணமாக இருந்ததும் வெங்காயம்தான். இப்போது ஒடிஷாவில் முதல் முறையாக ஆட்சி கைப்பற்றி இருக்கும் பாஜகவுக்கு 'உருளைக்கிழங்கு அரசியல்' பெரும் தலைவலியாக உருவெடுத்து நிற்கிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெங்காயம் பொதுவாக பயன்பாட்டில் உள்ள உணவுப் பொருள். வெங்காயத்துக்கு தட்டுப்பாடு, வெங்காய விலை உயர்வு என்பது எப்போதும் ஆளும் அரசுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகத்தான்ன் இருந்து வந்துள்ளது.

potato politics odisha

இந்திரா காந்தியும் வெங்காய விலையும்: 1975-ல் அவசர நிலையை அமல்படுத்திய இந்திரா காந்தி அம்மையார் 1977-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவினார். இந்தியாவில் முதல் முறையாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஜனதா அரசு பதவியேற்றது. ஆனால் ஜனதா அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது வெங்காய விலை உயர்வுதான். இதனை கையில் எடுத்த இந்திரா அம்மையார் இழந்த செல்வாக்கை 1980 லோக்சபா தேர்தலில் மீண்டும் பெற்று பிரதமரானார்.

டெல்லியில் பாஜகவை கதறவைத்த வெங்காயம்: 1998-ல் மத்தியில் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த போது டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக பெரும் தோல்வியைத் தழுவியது. இதற்கு காரணமும் அப்போது டெல்லி வாக்காளர்களை அலறவிட்ட வெங்காய விலை உயர்வுதான். இப்படி இந்தியாவின் அரசியலுடன் எப்போதும் 'வெங்காயத்துக்கு' முக்கியமான உறவு இருந்து வருகிறது.

உருளைக்கிழங்கு அரசியல்: தற்போது வெங்காயத்துக்கு போட்டியாக உருளைக்கிழங்கும் களமிறங்கிவிட்டது. ஒடிஷாவில் கால் நூற்றாண்டு கால பிஜூ ஜனதா தளம் ஆட்சியை வீழ்த்தி வெற்றி பெருமிதத்துடன் அரியாசனத்தில் அமர்ந்துள்ள பாஜக அரசை மூச்சு முட்ட வைத்துக் கொண்டிருக்கிறது ' உருளைக்கிழங்கு அரசியல்'.

உருளைக்கிழங்கு சாகுபடி மாநிலங்கள்: இந்திய மாநிலங்க்களிலேயே உருளைக்கிழங்கு சாகுபடி அதிகம் உள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம். நாட்டின் மொத்த உருளைக்கிழங்கு சாகுபடியில் உத்தரப்பிரதேசத்தின் பங்களிப்பு 29.65%. இதற்கு அடுத்ததுதான் மேற்கு வங்க மாநிலம். இம்மாநிலத்தின் உருளைக்கிழங்கு சாகுபடி 23.51%.

ஒடிஷாவும் உருளைக்கிழங்கும்: உருளைக்கிழங்கு அதிகமாக பயன்படுத்துகிற மாநிலங்களில் ஒடிஷா முக்கிய இடத்தில் உள்ளது. ஒரு ஆண்டுக்கு 13 லட்சம் மெட்ரிக் டன் உருளைக்கிழங்கு ஒடிஷாவுக்கு தேவையானதாக உள்ளது. ஆனால் ஒடிஷா மாநிலத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் உருளைக்கிழங்குதான் சாகுபடி செய்யப்படுகிறது.

மேற்கு வங்கம் டூ ஒடிஷா: இதனால் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தின் உருளைக்கிழங்கையே பெரிதும் நம்பி இருக்கிறது ஒடிஷா மாநிலம். மேற்கு வங்கத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் 100 முதல் 150 டிரக்குகளில் உருளைக்கிழங்கு ஒடிஷாவுக்கு 'ஏற்றுமதி'யாகிறது என்று சொல்லலாம். ஒவ்வொரு டிரக்கிலும் 16 முதல் 25 டன் உருளைக்கிழங்கு ஒடிஷாவுக்கு கொண்டுவரப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் 'உருளைக்கிழங்கு' பிரச்சனை: இப்போது என்ன பிரச்சனை என்கிறீர்களா? மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிராக திடீரென உருளைக்கிழங்கு டிரக் உரிமையாளர்கள் போராட்டத்தை அறிவித்தனர். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் உருளைக்கிழங்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஒடிஷா மாநிலத்துக்கு உருளைக்கிழங்கு 'ஏற்றுமதி'யை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

உருளைக்கிழங்கு விலை உயர்வால் அதிர்ச்சி: மேற்கு வங்கத்தில் இருந்து உருளைக்கிழங்கு வரத்து பாதிக்கப்பட்டதால் ஒடிஷாவில் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ30 முதல் ரூ35 என விற்பனையாகிக் கொண்டிருந்தது. மேற்கு வங்கத்தின் 'தடை'யால் ஒடிஷாவில் 1 கிலோ உருளைக்கிழங்கு விலை ரூ70 ஆக உயர்ந்தது. இதனால் ஒடிஷாவில் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

மமதாவுக்கு நவீன் கடிதம்: இந்த நிலையில் ஒடிஷா மாநில முன்னாள் முதல்வரும் பிஜூ ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிஷாவுக்கு தேவையான உருளைக்கிழங்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் முதல்வர் மமதா பானர்ஜி தலையிட வேண்டும் என கோரியிருந்தார்.

நவீன் பட்நாயக் மீது பாஜக பாய்ச்சல்: நவீன்பட்நாயக்கின் இந்த கடித அரசியலுக்கு ஒடிஷாவின் ஆளும் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிஷாவில் முதல்வராக இருந்த போது உருளைக்கிழங்கு சாகுபடியை அதிகரிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது எதற்கு இந்த நாடகம்? ஏன் 'உருளைக்கிழங்கு அரசியல்' செய்கிறார் நவீன் பட்நாயக் என கொந்தளித்தது பாஜக.

உ.பி.யில் இருந்து 'இறக்குமதி': தற்போது மேற்கு வங்கத்தில் இருந்து பாஜக ஆளும் ஒடிஷாவுக்கு உடனடியாக உருளைக்கிழங்கு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. இதனால் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரப்பிரதேசத்திடம் இருந்து உருளைக்கிழங்கை 'இறக்குமதி' செய்கிறது ஒடிஷா. மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிஷா 1 குவிண்டால் உருளைக்கிழங்கை ரூ2600-க்கு வாங்குகிறது. உத்தரப்பிரதேசத்தில் இருந்து 1 குவிண்டால் உருளைக்கிழங்கு ரூ2700 ஆக உள்ளது. போக்குவரத்து செலவு அதிகம் என்பதால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து நீண்ட காலத்துக்கு ஒடிஷாவால் கொள்முதல் செய்யவும் முடியாது.

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி கையில்..: ஒடிஷா சட்டசபையிலும் 'உருளைக்கிழங்கு அரசியல்' காரணமாக பாஜக- பிஜூ ஜனதா தளம் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் அரசு நினைத்தால்தான் ஒடிஷாவின் பாஜக அரசு, ஆட்சிக்கு நெருக்கடியை தந்துள்ள 'உருளைக்கிழங்கு அரசியலில்' இருந்து தப்பிக்க முடியும் என்பது எத்தனை விசித்திரமானது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+