AI Doctor: ஒவ்வொருவருக்கும் ஒரு ஏஐ டாக்டர்.. அறிவித்தார் சந்திரபாபு நாயுடு.. அசத்தப்போகும் ஆந்திரா.. செம
அமராவதி: ஆந்திராவில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஏஐ டாக்டர் (AI Doctor) வழங்கும் புதிய திட்டத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்மொழிந்துள்ளார். பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் சேர்ந்து இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் இந்த திட்டத்துக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

ஆந்திராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளது. துணை முதல்வராக பவன் கல்யாண் உள்ளார்.
இந்நிலையில் தான் முதல்வர் சந்திரபாபு நாயுடு புதுமையான திட்டத்தை முன்மொழிந்துள்ளார். தற்போது பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அதனை ஆந்திர பிரதேசத்தில் மக்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்துக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.
ஏஐ டாக்டர் திட்டம்
அதன்படி மாநிலம் முழுவதும் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் AI டாக்டர் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளதாவது:
ஆரோக்கியத்தை கண்காணிக்க...
ஒவ்வொரு தனிநபரின் ஆரோக்கியத்தையும் கண்காணிக்கும் வகையில் இந்த ஏஐ டாக்டர் திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தையும் கண்காணிக்க ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் அவசியம் உள்ளது. எதிர்காலம் ஏஐ என்பதால் இந்த திட்டத்தை தொடங்குகிறோம். உலகளவில் கல்வி முதல் நிர்வாகம் மற்றும் சுகாதாரம் வரை பல்வேறு துறைகளில் ஏஐ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
பில்கேட்ஸ் அரக்கட்டளையுடன்
பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து இதற்கென பிரத்யேக ஏஐமாடலை உருவாக்க உள்ளோம். தேவை ஏற்பட்டால் ஆந்திராவில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஏஐ டாக்டரை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
ஆலோசனைகளை பெற முடியும்
மக்களின் சுகாதாரம் சார்ந்த தரவுகளை டிஜிட்டல் மயமாக்கி ஸ்மார்ட்ஃபோன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் ஏஐ மாடல் மூலமாக மருத்துவமனை ஆலோசனைகளை வழங்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஏஐ ஒருவருக்கான உணவு, நோய் தடுப்பு குறித்த வழிக்காட்டுதல்களை வழங்கும். மாநிலம் முழுவதும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை கொண்டு செல்ல இந்த திட்டம் பயன்படும். குறிப்பாக கிராமங்களில் சுகாதாரத்துறையில் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். '' என்று கூறியுள்ளார்.
பில்கேட்ஸ் வருகை
அதன்படி பில்கேட்ஸ் ஆந்திர பிரதேசத்துக்கு இன்று வருகை தர உள்ளார். அப்போது இந்த திட்டம் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடுவின் இந்த திட்டத்துக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் ஏஐ-யை மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்தும் அவரது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதேவேளையில் இன்னொரு தரப்பினரோ உண்மையிலயே ஏஐ பயன்படுத்தி இந்த திட்டத்தை சிறப்பாக கொண்டு வர முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். மேலும் சிலர், சுகாதாரத்துறையில் ஏஐ-யின் இத்தகைய நடைமுறை சிறியி கிளினிக்கிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என கவலையை பகிர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications