தாக்க வந்த பாகிஸ்தான்.. 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு சம்பவம்
ஜம்மு காஷ்மீர்: இந்தியா -பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் என்பது அதிகரித்து வருகிறது. நேற்று இரவு முதல் பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை தாக்குதலை எல்லையோர கிராமங்களில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று காலையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் ஜம்மு காஷ்மீரில் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற நிலையில் 2 விமானங்களும் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டன.
பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ள பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன் கிழமை பாகிஸ்தானில் உள்ள பயங்கராத அமைப்புகளின் 9 முகாம்களை ஏவுகணை வீசி நாம் அழித்தோம். அதன்பிறகு நம்மை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் சீண்டி வருகிறது.

ஏவுகணை, ட்ரோன், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சிக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நம் ராணுவம் பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது.
இதன் தொடர்ச்சியாக இப்போது பாகிஸ்தானின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதாவது நேற்று இரவு முதல் நம் நாட்டின் 26 முக்கிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றது. இந்த ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் இன்று காலையில் பாகிஸ்தானின் 2 போர் விமானங்கள் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்து தாக்க முயன்றன. இதையடுத்து அந்த 2 போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதன்படி ஒரு விமானம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லஜான் பகுதியிலும், இன்னொரு விமானம் வடக்கு காஷ்மீர் பகுதியிலும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் வான்வெளி பாதுகாப்புக்காக நம் நாடு ஆகாஷ் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமை நிறுவி உள்ளது. இந்த ஆகாஷ் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் இந்த 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விமானங்களில் இருந்த விமானிகளின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
அந்த விமானிகள் விமானத்தில் இருந்து இறந்து இருக்கலாம். இல்லாவிட்டால் விமானத்தில் இருந்து Eject ஆகி வெளியேறி இருக்கலாம். இதனால் நம் எல்லை பகுதியில் விமானிகளை தேடும் பணியை ராணுவத்தினர் தொடங்கி உள்ளனர். நேற்று இரவு முதலே காஷ்மீரின் பல இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்று வருகிறது. இன்று காலையில் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications