ஜார்க்கண்டில் பாஜகவுக்கு எதிர்பாராத ட்விஸ்ட்.. சிராக் பாஸ்வான் அறிவிப்பால் அதிரும் தேர்தல் களம்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றும் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்று மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியிருப்பது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலம் ஜார்க்கண்ட். இயற்கை வளம் நிறைந்த ஜார்க்கண்ட் கடந்த 2000 ஆம் ஆண்டு பீகாரில் இருந்து பிரிக்கப்பட்டு தனிமாநிலமாக உருவானது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோச்சா எனப்படும் ஜேஎம்எம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ளது.

முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வர உள்ளது. இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் அங்கு அரசியல் களம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.
அங்கு இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், மாநில அரசியல் சூடுபிடித்துள்ளது. ஜார்க்கண்டில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக பாஜக, கூட்டணி கட்சிகளுடன் தற்போதே ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஓரிரு நாட்களில் இந்த கூட்டணியானது இறுதியாகும் எனத் தெரிகிறது. ஜார்க்கண்டில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில், ஏஜேஎஸ்யு கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அசாம் முதல்வரும் பாஜக ஜார்க்கண்ட் தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்து இருக்கிறார்.
இதற்கிடையே, பாஜக கூட்டணியில் இருக்கும் சிரக் பாஸ்வான் தனது லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி, ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். கூட்டணி அமைத்தோ அல்லது தனியாகவோ தனது கட்சி போட்டியிடும் என்று சிரக் பாஸ்வான் அறிவித்துள்ளது பாஜகவிற்கு தலைவலியை கொடுத்துள்ளது. கூட்டணியை இறுதிப்படுத்தும் நிலையில் உள்ள பாஜகவுக்கு சிராக் பாஸ்வானின் இந்த அறிவிப்பு கடும் நெருக்கடியாக மாறியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஜார்க்கண்டில் பல்வேறு பகுதிகளில் செல்வாக்கு உள்ளது. இதனால், பாஜக என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஜார்க்கண்ட் அரசியல் வட்டாரத்தில் எகிறியுள்ளது.
மத்திய அமைச்சராக இருக்கும் சிரக் பாஸ்வான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- "நான் பிறக்கும் போது ஜார்க்கண்ட், பீகாருடன் தான் இருந்தது. ஜார்க்கண்ட் எனது தந்தை பணியாற்றிய இடம். இங்கு கட்சிக்கு வலுவான அடித்தளம் உள்ளது. இந்த சூழலில், ஜார்க்கண்டில் போட்டியிடுவது என எங்கள் கட்சி முடிவு செய்து இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications