காஷ்மீரில் தினந்தோறும் படுகொலைகள் -30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அகதிகளாக இடம்பெயரும் பண்டிட்டுகள்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தினந்தோறும் பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்களைப் படுகொலை செய்து வருகின்றனர். இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மீண்டும் 1990களுக்கு திரும்பி இருப்பதாக தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அசாதாரண நிலைமை தொடருவதால் அங்கிருந்து பண்டிட்டுகள் அகதிகளாக பெருமளவு இடம்பெயருகிற துயரமும் அரங்கேறுகிறது.
1980கள், 1990களில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் தலையெடுத்தது. அப்பாவி பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். மக்கள் பாதுகாப்புக்கான ராணுவம் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் ஜம்மு காஷ்மீரில் ரத்த ஆறு ஓடியது.
ஜம்மு காஷ்மீரில் இருந்து பண்டிட் சமூகத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற மறுத்த பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர். இதனால் பண்டிட்டுகள் உள்நாடிட்லேயே அகதிகளாக அல்லல்பட்டனர். அண்மையில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பண்டிட்டுகள் எதிர்கொண்ட துயரையே விவரித்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் நிலைமை
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த பல ஆண்டுகளாக பண்டிட்டுகளை மீள குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகள் அரசுப் பணியில் அமர்த்தப்பட்டனர். இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. மேலும் பண்டிட்டுகள் மீள் குடியேற்றமும் செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் படுகொலைகள்
இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது பண்டிட்டுகளை இலக்கு வைத்து அடுத்தடுத்து படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தவர் அல்லாத பொதுமக்களையும் பயங்கரவாதிகள் குறிவைத்து படுகொலை செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக படுகொலை சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்கின்றன.

30 ஆண்டுகளுக்கு பின்
இதனையடுத்து பண்டிட்டுகள் மீண்டும் ஜம்மு காஷ்மீரில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பண்டிட்டுகள் இடம்பெயயர்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் பண்டிட்டுகள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறாத வகையில் பாதுகாப்பு படையினரால் வீடுகளுக்குள் தடுத்தும் வைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மீண்டும் 1990களை நோக்கி திரும்புகிறது என்கிறது தேசிய மாநாட்டு கட்சி.

அமித்ஷா ஆலோசனை
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து இடைவிடாத ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரா பிரிவின் தலைவர் உள்ளிட்டோருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். முன்னாள் ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் கொல்லப்படுவதற்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications