பணம் எடுத்தா கையில மை... என்னதான் நடக்குது நாட்டில்.. அலற வைக்கும் "மை"ய அரசு!
வங்கிகளில் பணம் எடுப்போருக்கு மை வைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: பொதுமக்களே நீங்கள் வங்கிகள் பக்கமே தலைவைத்து படுக்கக் கூடாது என்கிற வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பாயத் தொடங்கியுள்ளன. இனி வங்கிகளுக்கு போனால் வாக்குச் சாவடிகளில் வைப்பது போல மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே நிச்சயம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததுதான் போதும்... மக்கள் போதும் போதும்... ஆளை விடுங்கப்பா சாமி என்கிற அளவில் நாள்தோறும் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.

நாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள் 10% பேர்தான்.... ஆனால் 90% மக்கள் இதற்காக 'தண்டனைகளை' அனுபவித்து வருகிறார்கள். ஏற்கனவே வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் அன்றாட வாழ்க்கையை தொலைத்துவிட்டு நடுத்தெருவில் நிற்கிறார்கள் பொதுமக்கள்.
[Read This: கறுப்பு பணத்தை தடுக்க ரூ. 4500 பணம் மாற்றுபவர்கள் விரலில் அழியாத மை- சக்தி காந்த தாஸ்]
தற்போது வங்கிகளுக்கு சென்று அதிகபட்சம் ரூ4,500 பெற்றால் அழிக்க முடியாத அடையாள மை வைப்போம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அப்படியானால் ஒருவர்
- ரூ4,500க்கு மேல் வங்கிக்குப் போய் பணம் எடுக்கவே கூடாதா?
- வங்கிகளில் மை வைக்கும் நடைமுறை எத்தனை நாள் அமலில் இருக்கும்?
- அந்த மை அழியும் வரை வங்கி பக்கமே எட்டிப் பார்க்க கூடாதா?
- அப்படி போனால் கருப்பு பணத்தை வெள்ளையாக்க வந்த தேசதுரோகி என உள்ளே தள்ளிவிடுவார்களா?
என ஏகத்துக்குமான கேள்விகளுக்கு விடைகள் இல்லை..
வருகிறவர்களே மீண்டும் வருவதை தடுக்கத்தான் இந்த திட்டம் என்கிறது மத்திய அரசு.
ரூ4,500 பணத்தை ஒரு முறை வங்கியில் எடுத்துவிட்டு ஏடிஎம் மையங்களில்தான் இனி எஞ்சிய தொகைக்கும் காத்து கிடக்க வேண்டும் என்று 'துக்ளக்' தர்பாரை நடத்துகிறதா மத்திய அரசு?
ஏடிஎம் மையங்களில் இன்னும் பணம் நிரப்பப்படவே இல்லையே?
பணத்தை எப்படியும் எடுத்துவிட வேண்டும் என்பதற்காக ஏஎடிம் மையங்களிலும் கூட மீண்டும் மீண்டும் வருகிறார்களே?
அப்படி வருவதை தடுக்கவும் ஏதாவது கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துவிடுமோ என்ற அலறல்தான் பொதுமக்களிடம் எழுகிறது.
ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இல்லாத நிலையில் கையில் மையை வைத்துக் கொண்டு தலையில் கையை வைத்துக் கொண்டு தெருவில்தான் அலையச் சொல்கிறதா மத்திய அரசு என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கனவே வங்கி ஊழியர்கள் விடுமுறையின்றி பணியாற்றி வருகின்றனர். இப்போது மை வைக்கும் கூடுதல் பணியையும் செய்ய வேண்டியிருக்கும்.
கருப்புப் பணம் பதுக்கும் சிலரை கட்டுப்படுத்த முடியாத திராணி இல்லாத மத்திய அரசு ஒட்டுமொத்த தேசத்து மக்களை எந்த ஒரு முன் யோசனையும் திட்டமுமே இல்லாமல் இப்படி நாள்தோறும் வதைத்துக் கொண்டிருப்பது 'கொடூர'த்தின் உச்சம்தான்!
மொத்தத்தில் நாட்டுக்கு எப்படியோ மக்களுக்கு நிச்சயம் இப்போதைக்கு நல்ல நேரம் இல்லை என்பது மட்டும் திட்டவட்டமாகவே தெரிகிறது.
துக்ளக் தர்பார்!












Click it and Unblock the Notifications