ஜல்லிக்கட்டுக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் பீட்டா- சுப்ரீம் கோர்ட்டில் மனு
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை கோரி மீண்டும் பீட்ட அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு அனுமதி அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து 'பீட்டா' அமைப்பு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகளின் பட்டியலில் இருந்து மத்தியரசு நீக்கியது இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்தது. இதனை அடிப்படையாகக்கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முழுமையாக தடை விதித்தது.

2015, 2016ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு நீதிமன்றம் வழங்காத நிலையில், இந்த ஆண்டு மெரீனா போராட்டம் நடத்தி, இந்திய மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு சார்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இருந்த தடை நீங்கியது.
'தற்போது மீண்டும் 'பீட்டா' அமைப்பு புதிய வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழக அரசு சட்டதிருத்தம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதித்தது உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறும் செயல். மேலும், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள விலங்குகளுக்கான ஐந்து அடிப்படை உரிமைகளை மீறுவதாக தமிழக அரசின் சட்டம் அமைந்துள்ளது.
இச்சட்டம் நிறைவேற்றிய பிறகு நடந்த போட்டிகளில் ஐந்து காளைகள், 15 மனிதர்கள் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிருக்கு சேதம் ஏற்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். காளைகளும் அதிக அளவில் துன்புறுத்தப்படுகின்றன. கூர்மையான ஆயுதங்களால் குத்தி காயப்படுத்துகின்றனர். காளைகள் மீது பாய்ந்து விழுவதாலும், மூக்கணாங்கயிறை பிடித்து இழுப்பதாலும் காளைகளுக்கு ரத்தக் காயம் ஏற்படுகிறது.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், திருநல்லூர், மறவபட்டி உள்ளிட்ட இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். எனவே, தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கான்வில்கர், சந்திரசூட் அமர்வு இந்த மனு குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டனர்.தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஆதரவான சட்டத்தை எதிர்த்து போடப்பட்டுள்ள வழக்குகளின் பட்டியலில் இதை இணைக்குமாறு உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications
