லோக்சபா தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் செய்த மோடி.. வாரணாசி ஆட்சியர் யார்? எந்த ஊர் தெரியுமா?
வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, 2001-ம் ஆண்டு அம்மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007, 2012 குஜராத் சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதல்வரானார்.

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா, உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் மோடி போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மோடி, வதோதரா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். 2014-ல் முதல் முறையாக நாட்டின் பிரதமராகவும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் 2-வது முறையாக வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட்டு வென்றார். நாட்டின் பிரதமராக 2-வது முறையாக பதவியேற்றார் மோடி.

தற்போதைய 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 3-வது முறையாக வாரணாசி லோக்சபா தொகுதியில் மோடி போட்டியிடுகிறார். இதற்காக இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜான்நாயகக் கூட்டணி தலைவர்களுடன் சென்று மோடி வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதிநிதியாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், மோடி வேட்பு மனுத் தாக்கலின் போது உடன் சென்றார்.

வாரணாசி தொகுதியில் மாவட்ட ஆட்சியர்/ தேர்தல் அதிகாரியான ராஜலிங்கத்திடம் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி. வாரணாசி மாவட்ட ஆட்சியரான ராஜலிங்கம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தமிழரான ராஜலிங்கம் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர். திருச்சி என்.ஐ.டி.யில் பொறியியல் பட்டம் பெற்றவர். 2009-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜலிங்கம் சுல்தான்பூர், குஷிநகரில் ஆட்சியராகப் பணிபுரிந்தார். குஷிநகரில் பணியாற்றிய போது அவரது செயல்பாடுகளை பிரதமர் மோடி தோளில் தட்டிப் பாராட்டி இருந்தார். பின்னர் 2022-ம் ஆண்டு பிரதமர் மோடியின் தொகுதி வாரணாசியில் மாவட்ட ஆட்சியராக ராஜலிங்கம் நியமிக்கப்பட்டார்.
மேலும் பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கல் செய்த போது பண்டிதர் ஞானேஸ்வர் சாஸ்திரிதான் அவர் அருகே அமர்ந்திருந்தார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தைவிட ஞானேஸ்வர் சாஸ்திரிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த ஞானேஸ்வர் சாஸ்திரியின் முன்னோர்கள் தமிழ்நாட்டின் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications