பீகார் பெண்களுக்கு தலா ரூ.10000.. 75 லட்சம் பேர் பெறுவார்கள்.. தேர்தல் நேரத்தில் மோடி மூவ்
பாட்னா: சுயதொழில் தொடங்க உதவியாக பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவியை வழங்கும் புதிய திட்டத்தை பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.
"முக்கியமந்திரி மஹிலா ரோஜ்கர் யோஜனா" என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தை பீகார் அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்திற்கான ஒப்புதல் சமீபத்தில் சட்டமன்றத்தில் பெறப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை நாளை மறுநாள் பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

இந்த நிதியுதவி, பெண்கள் தொழில்களைத் தொடங்கவோ அல்லது விரிவாக்கவோ உதவும். மொத்தம் ரூ.7,500 கோடி நிதி, 75 லட்சம் தகுதியுள்ள பெண்களுக்கு நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் வழங்கப்படும்.
இத்திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக ஒவ்வொரு தகுதியான குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு ரூ.10,000 வழங்கப்படும். இந்தத் தொகையை தையல், கால்நடை வளர்ப்பு, விவசாயம், கைவினைப் பொருட்கள் அல்லது வர்த்தகம் போன்ற சிறு வணிகங்களைத் தொடங்கப் பயன்படுத்தலாம். வெற்றி பெற்றால், ஆறு மாதங்களுக்குள் மேலும் ரூ.2 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும். இந்தத் திட்டம் குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
பீகார் முழுவதும் பரவலான பங்கேற்பு
இது குறித்த பீகார் அதிகாரிகள் கூறுகையில், இந்தத் திட்டத்திற்கான வரவேற்பு அபாரமாக உள்ளது. 1.07 கோடி கிராமப்புறப் பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர், 4.66 லட்சம் நகர்ப்புறப் பெண்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். மேலும், 1.4 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் சுயஉதவிக் குழுக்களில் சேர புதிதாக விண்ணப்பித்துள்ளனர். இந்தத் திட்டம், பீகாரின் கிராமப்புற வாழ்வாதார முன்முயற்சியான JEEViKA மூலம் செயல்படுத்தப்படுகிறது. இது அடித்தள அளவில் மக்களை சென்றடைவதை உறுதி செய்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
யார் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம்?
இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற, விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும். அவர் அரசுப் பணியில் இல்லாத, வருமான வரி செலுத்தாத குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். பெற்றோர் இல்லாத? திருமணமாகாத வயது வந்த பெண்களும் தகுதியுடையவர்கள்.
எளிதான விண்ணப்ப செயல்முறை
கிராமப்புறப் பெண்கள் தங்கள் கிராம அமைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். சுயஉதவிக் குழுவுடன் இணைக்கப்பட்ட பெண்கள், குழு கூட்டங்களின் போது ஒரு ஒருங்கிணைந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். நகர்ப்புறப் பெண்கள் www.brlps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே சுயஉதவிக் குழுக்களுடன் இணைந்த பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
JEEViKA-வின் தலைமை நிர்வாக அதிகாரி ஹிமான்ஷு சர்மா கூறுகையில், "செப்டம்பர் 26ம் தேதி 75 லட்சம் பெண்களுக்கு நிதி கிடைக்கும், விடுபட்டவர்களுக்கும் நிதியுதவி வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பிரதமர் நேரடியாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்கான பொத்தானை அழுத்துவார்" என்று கூறியிருக்கிறார்.
JD(U) கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், "நிதிஷ் குமார் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதியுடன் மக்களைச் சந்திக்கிறார். மற்றவர்கள் வெறும் வாக்குறுதியுடன் மக்களை சந்திக்கிறார்கள். அனைவரும் நிதிஷ் குமாராக இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி இருக்கிறது. முதலமைச்சராக நிதிஷ்குமார் இருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பீகாரில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications