ஐ.நா மாநாட்டிற்காக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி- நாளை மறுநாள் பயணம்
டெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் அமெரிக்கா பயணமாகின்றார். நியூயார்க்கில் நடைபெறுகின்ற ஐ.நா மாநாட்டில் கலந்து கொள்ள அவர் அமெரிக்க பயணம் மேற்கொள்கின்றார்.
இந்தப் பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் மேம்படும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க நாளை மறுநாள் அமெரிக்கா புறப்படவுள்ளள நிலையில், அதுதொடர்பாக மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐ.நாவின் நிலையான வளர்ச்சிக்கான புதிய யுக்தி 2015 மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஐ.நாவில் மேற்கொள்ள உள்ள சீர்திருத்தம் தொடர்பாக 193 நாடுகளுக்கு தான் கடிதம் எழுதியதாகவும், பல்வேறு நாடுகள் தனது கருத்தை ஆதரித்து பதில் அளித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உறவு என்பதைத் தாண்டி, சர்வதேச விவகாரங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக செயல்பட இரு நாடுகளும் முடிவெடுத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்முறையாக இரு நாடுகளுக்கு இடையே ராஜதந்திர மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது குறித்து மிகுந்த ஆவலுடன் உள்ளதாக கூறியுள்ளார்.
நாளை மறுநாள் பிரதமர் மோடி அமெரிக்கா புறப்படவுள்ள நிலையில், அப்போது கையெழுத்தாக உள்ள ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான இக்கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூம், வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பங்கேற்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications