ம.பியில் கோர விபத்து.. தீபாவளிக்கு ஆசையாக ஊர் திரும்பிய 15 பேர் பலி.. பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
போபால்: ஹைதராபாத்திலிருந்து உத்தரப் பிரதேசம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சத்தை நிவாரணமாக அறிவித்துள்ளார்.
அதேபோல படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

விபத்து
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், கொண்டாட்டங்கள் தற்போதே களைக்கட்ட தொடங்கியுள்ளன. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் பணி புரிந்தது வந்த உத்தரப் பிரதேச தொழிலாளர்கள் தீபாளியை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

மீட்பு
நேற்றிரவு அவர்கள் பயணித்த பேருந்து ஜபல்பூரில் இருந்து ரேவா வழியாக பிரயாக்ராஜ் நோக்கி தேசிய நெடுஞ்சாலை 30ல் சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது வேகமாக மோதியுள்ளது. என்ன நடந்தது என்பதை உணர்ந்துகொள்வதற்கு முன்னரே பேருந்தில் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் உயிரிழக்க தொடங்கினர். உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர்.

பிரதமர்
பின்னர் விபத்து நடந்த பகுதியை மாவட்ட ஆட்சியர் மனோஜ் புஷ்ப், எஸ்பி நவ்நீத் பாசின், மௌகஞ்ச் ஏஎஸ்பி விவேக் குமார் லால், எஸ்டிஓபி தியோந்தர் சமர்ஜித் சிங் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்தில் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு PMNRF நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மாநில அரசு
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல உத்தரப் பிரதேச முதலமைச்சரும் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிக்கு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications