மலை போல தங்கம்.. 46 ஆண்டுகளுக்கு பின் பூரி ஜெகநாதர் பொக்கிஷ அறை திறப்பு.. மர்மம் விலகுமா?
புவனேஷ்வர்: உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி தொடங்க உள்ளது. தொல்லியல் துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் முன்னிலையில் ரத்னா பந்தர் என்னும் பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு பல்வேறு கால கட்டங்களில் அங்கு ஆட்சி செய்த மன்னர்கள் விலை மதிப்பு மிக்க ஆபரணங்களை காணிக்கையாக அளித்தனர். அதாவது, தங்கம், வைரம், வைடூரியம் என விலை மதிப்பில்லா நகைகளை காணிக்கையாக அளித்து இருக்கிறார்கள்...

ஜெகநாதர் கோயில்: இந்த நகைகள் அனைத்தும் ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறைக்குள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. கோயில் தரைப்பகுதிக்கு கீழே சுரங்க அறை ஏற்படுத்தி அதற்குள் நகைகள் வைக்கப்பட்டுள்ளன. பொக்கிஷ அறை இரண்டு பெரிய அறைகளாக பிரிக்கப்பட்டு உள்பகுதியில் உள்ள அறையில் விலை மதிப்பு மிக்க நகைகள் இருப்பதாகவும் வெளிப்பகுதியில் அன்றாடம் இறைவனுக்கு அளிக்கப்படும் நகைகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
1978- ல் திறக்கப்பட்டது: இதில் உள்ளே உள்ள அறை குறித்துதான் தற்போது மர்மங்கள் நிலவி வருகிறது. இந்த அறை கடைசியாக 1978- ல் திறக்கப்பட்டது. அப்போது அதை அருகில் இருந்து பார்த்தவர் நகைகள் அனைத்தும் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். தரைக்கு கீழேயும் கடல் பகுதியை ஒட்டியும் இந்த அறைகள் உள்ளன.
எனவே பொக்கிஷ அறை குறித்து ஆராய 1984 ல் தொல்லியல் துறை குழு அய்வு செய்ய சென்றது. ஆனால், பொக்கிஷ அறையின் நிலமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் பாம்புகள் உள்ளே இருப்பதாகவும் கூறி திரும்பி வந்து விட்டது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போனதாகவும் ஒரு ஷாக் தகவல் வெளியானது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
பொக்கிஷ அறை திறப்பு: ஆனாலும் விசாரணை விவரங்களை அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில் தான் தற்போது 46 ஆண்டுகளுக்கு பிறகு பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது. பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி தொடங்க உள்ளது.. தொல்லியல் துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் முன்னிலையில் ரத்னா பந்தர் என்னும் பொக்கிஷ அறை திறக்கப்பட்டுள்ளது. பொக்கிஷ அறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகள் முழுவதும் வீடியோ ரெக்கார்டு செய்யப்படும். மிகவும் ரகசியமாகவே இது வைத்திருக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதிப்பீடு பணி எப்போது?: இன்று பிற்பகல் 1.28 மணிக்கு நல்ல நேரத்தில் திறக்கப்பட்டது. மதிப்பீட்டு பணி இன்று நடைபெறாது எனவும் அரசிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகு நகை மதிபீட்டாளர்கள் முன்னிலையில் மதிப்பீடு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மதிப்பீட்டு பணிகள் முடிய சுமார் 70 நாட்கள் வரை ஆகலாம் என அதிகாரிகள் கூறினர்,












Click it and Unblock the Notifications