ஆர்.எஸ்.எஸ்., பாஜக நடத்தும் அரசியல் நிகழ்ச்சிதான் ராமர் கோவில் திறப்பு விழா- ராகுல் பொளேர் அட்டாக்
கோஹிமா: ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக இணைந்து நடத்தும் அரசியல் நிகழ்ச்சிதான் வரும் 22-ந் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
மணிப்பூரில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, நாகாலாந்தில் பயணம் செய்து வருகிறார். நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் இன்று செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆகியவை மோடியின் அரசியல் விழாவாக மாற்றி விட்டனர்.

அரசியல் நிகழ்ச்சி: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா என்பது ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் நிகழ்ச்சி. அதில் எதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க வேண்டும்? நாம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர்கள். அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும். இந்து மதத்தின் உயர் தலைவர்களான சங்கராச்சாரியார்களே ஜனவரி 22-ந் தேதி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா ஒரு அரசியல் நிகழ்வு என பகிரங்கமாகவே விமர்சித்துள்ளனர். ஆகையால்தான் காங்கிரஸ் அதில் பங்கேற்கவில்லை.
மிகைப்படுத்தும் ஊடகங்கள்: லோக்சபா தேர்தலில் பாஜகவை முழு வீச்சில் "இந்தியா" கூட்டணி எதிர்கொள்ளும். "இந்தியா" கூட்டணி விவகாரங்களை ஊடகங்கள்தான் மிகைப்படுத்துகின்றன. "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களிடையே நல்ல புரிந்துணர்வும் பரஸ்பர மரியாதையும் இருந்து வருகிறது.
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: "இந்தியா" கூட்டணியில் இருக்கும் சிறு பிரச்சனைகளுக்கும் கூட விரைவில் தீர்வு காண்போம். லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைந்து நிற்போம். "இந்தியா" கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கும் தீர்வு காண்போம்.
LIVE: Bharat Jodo Nyay Yatra | Tseminyu to Wokha | Nagaland https://t.co/0uaEbzO0nK
— Rahul Gandhi (@RahulGandhi) January 16, 2024
யாத்திரை ஏன்?: பாரத் ஜோடோ நியாய யாத்திரையை பாத யாத்திரையாக நடத்தவே திட்டமிட்டோம். ஆனால் மிக நீண்ட தொலைவு பயணம்; அதிக நாட்கள் ஆகும் என்பதால் பாதயாத்திரையாகவும் பேருந்து யாத்திரையாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நோக்கமே சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான். மணிப்பூரில் இருந்து இந்த 2-வது யாத்திரையை தொடங்கி இருக்கிறோம். ஏனெனில் மணிப்பூர் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தில் இவ்வளவு பெரிய வன்முறை நடந்தும் ஒரு பிரதமர் அம்மாநிலத்துக்கு நேரில் செல்லாதது முதல் முறை. நாகாலாந்து மக்களுக்கும் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications