ஒடிஷா பாலசோர் வழித்தடத்தில் 60 மணிநேரத்துக்கு பின்.. குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் இயக்கம்!
புவனேஸ்வர்: ஒடிஷாவில் 275 பேரை பலி கொண்ட கோர விபத்து நிகழ்ந்த பாலசோர் வழித்தடத்தில் 60 மணிநேரத்துக்குப் பின் குறைந்த வேகத்தில் இன்று காலை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
ஒடிஷாவின் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ஆகியவை விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. நேற்று இந்த ரயில் வழித்தடத்தில் சோதனை ஓட்டமாக ரயில்கள் இயக்கப்பட்டன. அப்போது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இரு கரம் கூப்பி வணங்கி, ரயில் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இன்று காலை பாலசோர் வழித்தடத்தில் குறைந்த வேகத்தில் முதலாவது பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. சுமார் 60 மணிநேரத்துக்குப் பாலசோர் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைய மேலும் 2 நாட்கள் ஆகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே இன்று சென்னையில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 3 மணிநேரம் தாமதமாக இயக்கப்படும். சீரமைப்பு பணிகளை காரணம் காட்டி 125 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 56 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேறு மார்க்கமாக மாற்றிவிடப்பட்டுள்ளன. சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications