For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா - பாகிஸ்தான் 1971 போர்: வங்கதேசம் பிறந்த வரலாற்றில் இந்திரா காந்தியின் பங்கு என்ன?

By BBC News தமிழ்
|

1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில் கிடைத்த வெற்றியை, பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16, ஒவ்வோர் ஆண்டும் வெற்றி தினமாக (Victory Day) அனுசரிக்கப்படுகிறது.

அதுவரை கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நிலப்பகுதி, இந்தப் போருக்குப் பிறகுதான் வங்கதேசம் என்ற தனி நாடாக உருவானது. அதற்கு வித்திட்ட, 1971-ம் ஆண்டு சுமார் 13 நாட்கள் நடந்த, அந்தப் போர் குறித்துத் தெரிந்துகொள்வதற்கான ஒரு ப்ளாஷ்பேக்தான் இது.

பிரிவினைக்கு பின், இன்றைய பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்றும், இன்று தனி நாடாக உள்ள வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்டன.

கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து தனி நாடு ஆவதற்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். மார்ச் 26, 1971 அன்று, கிழக்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தானிடமிருந்து பிரிய வேண்டுமென்ற கோரிக்கையை அறிவித்தது.

பாகிஸ்தானில், வங்காள மொழி பேசிய மக்கள் மோசமாக நடத்தப்பட்டதோடு, தேர்தல் முடிவுகளிலும் குளறுபடி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள், மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக விடுதலைப் போரை தொடங்கினார்கள்.

அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, கிழக்கு பாகிஸ்தான் மக்களுடைய விடுதலைப் போருக்கு முழு ஆதரவு கொடுத்தார். ஏப்ரல் மாதத்தில், அவர் இந்திய ராணுவத் தளபதி மேனக் ஷாவிடம் பாகிஸ்தானோடு போருக்குச் செல்லத் தயாராக இருக்கிறாரா என்று கேட்டார்.

இந்நிலையில், 1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியன்று, ஆபரேஷன் கெங்கிஸ் கான் என்ற பெயரில் பாகிஸ்தான் படைகள் இந்தியாவின் 11 விமானப் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாகப் பேசிய பிரதமர் இந்திரா காந்தி, இந்தத் தாக்குதல் போருக்கான ஓர் அறிவிப்பு. அதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது என்று கூறினார். மேலும், முழு வீச்சில் போரைத் தொடங்குமாறும் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் போர் தொடங்கியது.

ராணுவம், கடற்படை, விமானப்படை அனைத்தையும் களமிறக்கி, தரைவழித் தாக்குதல், வான் வழித் தாக்குதல், கடல்வழித் தாக்குதல் என்று மும்முனைத் தாக்குதலை பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்டது.

மேற்கே இந்தியாவிற்குள் பாகிஸ்தான் படைகள் நுழைந்துவிடாமல் தடுப்பதும் கிழக்கே டாக்காவை கைப்பற்றுவதும் இந்திய படைகளின் குறிக்கோளாக இருந்தது.

பாகிஸ்தானின் கடற்படை இந்திய கடற்படையை ஆழ்கடல் போரில் எதிர்க்கும் அளவுக்கு மட்டுமின்றி, தற்காப்புப் போர் புரியும் அளவுக்குக்கூட வலிமையான நிலையில் அப்போது இல்லை.

டிரைடென்ட், பைத்தான் என்ற குறியீட்டுப் பெயர்களின் கீழ், இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தை டிசம்பர் 4, 5 மற்றும் 8,9 ஆகிய தேதிகளில் தாக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, டிசம்பர் 9-ம் தேதியன்று பாகிஸ்தானுடைய ஹேங்கோர் நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில், இந்தியாவுக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் குக்ரி என்ற போர்க் கப்பல் மூழ்கியது.

டிசம்பர் 3-ம் தேதியன்று பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தபிறகு, பாகிஸ்தான் விமானப்படை தற்காப்புத் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியது.

மேற்கு பாகிஸ்தானில், டிசம்பர் 8-ம் தேதியன்று இந்தியா வெற்றிகரமான வான்வழித் தாக்குதலை, விமானப்படை தளம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தியது. இந்தப் போரில் நடைபெற்ற வான்வழித் தாக்குதல்களில், பாகிஸ்தான் விமானப் படை சுமார் 60 சதவீத விமானங்களை இழக்க நேர்ந்தது.

தரைவழித் தாக்குதலில் பாகிஸ்தான் படைகளில் 8,000 பேர் கொல்லப்பட்டனர். 25,000 பேர் காயமடைந்தனர். இந்தியப் படைகளில் 3,000 பேர் கொல்லப்பட்டனர். 12,000 பேர் காயமடைந்தனர். ஆயுதம் தாங்கிய வாகனங்களின் இழப்பும் பாகிஸ்தான் தரப்பிலேயே அதிகமாக இருந்தது.

13 நாட்களுக்கு நடந்த இந்தப் போரில், டிசம்பர் 15-ம் தேதியன்று இந்தப் போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியது. அடுத்த நாளான டிசம்பர் 16-ம் தேதியில், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி (Amir Abdulla Khan Niazi), இந்திய ராணுவத்திடம் 93,000 படைவீரர்களோடு சரணடைந்தார்.

இந்தப் போருக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாகவும் மேற்கு பாகிஸ்தான் இன்றைய பாகிஸ்தானாகவும் பிரிந்தன. இந்தப் போரில் பிரிந்த பல குடும்பங்கள் இன்று வரை, இணைய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுவது உண்டு.

லடாக் யூனியன் பிரதேசத்தில் வடக்குப் பகுதியில் வெகு தூரத்தில் - டுர்டுக், டியாக்சி, சாலுன்கா, தாங் - ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. போரின்போது இந்திய ஆளுகையின்கீழ் இவை வந்தன.

இந்தியாவின் வடக்கில் லடாக்கின் எல்லையில் இந்த குக்கிராமங்கள், ஷியோக் நதியை ஒட்டி, காரகோரம் மலைச்சிகர பாதுகாப்புப் பிரிவினரின் காவலுக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தன.

1971 இந்தியா பாகிஸ்தான் போர்
BBC
1971 இந்தியா பாகிஸ்தான் போர்

லடாக் பகுதி புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி. இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பால்ட்டி மொழி பேசும் முஸ்லிம்களாக இருந்தனர்.

1971 வரையில், இந்த நான்கு கிராமங்களும் பாகிஸ்தானின் பகுதிகளாக இருந்தன. ஆனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் ஏற்பட்டதை அடுத்து அவற்றின் அடையாளம் மாறியது.

2010 வரையில் சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 2010ல் டுர்டுக் கிராமத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கிராமங்களிலிருந்து சுமார் 250 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போரின்போது பிரிந்து போனதாக கிராமத்தினர் சொல்கிறார்கள்.

டிசம்பர் 16, 1971 அன்று பாகிஸ்தான் படைகள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்த நாளில், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் என்ற தனி நாடு பிறந்தது. அன்றிலிருந்து வங்கதேசம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு, ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான புது அரசாங்கத்தை இந்தியா அங்கீகரித்தது.

அதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் வங்கதேசம், டிசம்பர் 16-ம் தேதியை சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறது. இந்தியா-பாகிஸ்தான் போரில் உயிரிழந்த வீரர்களைப் போற்றும் வகையில் அந்த நாள், "விஜய் திவாஸ்" என்ற பெயரில் இந்தியாவில் 'வெற்றி தின'மாகக் அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் வெற்றி நாளில், இந்த விடுதலைப் போரில் பங்கேற்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Role of Indira gandhi in bangladesh freedom
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X