கணக்கு வழக்கில்லாமல் ரூ.2000 நோட்டுக்கள் வைத்திருந்த 4 இளைஞர்கள் கைது… 12 லட்சம் பறிமுதல்
புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாக 12 லட்சம் வைத்திருந்த 4 இளைஞர்கள் போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்: கணக்கு வழக்கு இல்லாமல் 12 லட்சம் மதிப்பில், புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த 4 இளைஞர்களை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.
கறுப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதிய 2000 ரூபாய் நோட்டையும் அறிமுகம் செய்தனர். இந்தப் பணத்தைப் பெறுவதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்களுக்கு மத்திய அரசு விதித்தது.

இதனையடுத்து, பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி பெரிய பணக்காரர்கள் பதுக்கி வைத்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், பெரும் பணக்காரர்களின் வீடுகளை வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி கணக்கில் காட்டாத பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று, ஹைதராபாத்தில் கணக்கில் காட்டாத 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் 12 லட்ச ரூபாயை புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாக எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் 12 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பது அப்போது தெரிய வந்தது. தாங்கள் வைத்திருக்கும் ரூபாய்க்கான முறையான ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.
இதனால், அவர்கள் 4 பேரையும் பஞ்சகுட்டா காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்களின் பெயரை வெளியிட மறுத்துள்ள போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications