ஆவணி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. 21 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம்!
சபரிமலை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, ஒவ்வொரு மாதத்திலும் முதல் 5 நாட்களில் திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
சபரிமலை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து, தீபாராதனை காட்டி யோக நித்திரையில் இருக்கும் ஐயப்பனை எழுப்பி உள்ளார்.

கற்பூர ஆழியில் தீபம் ஏற்றியதும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். நடை திறப்பையொட்டி, சிறப்பு பூஜைகள் இன்று நடைபெறவில்லை. கோயில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 21 ஆம் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
பக்தர்கள் தரிசனத்திற்காகவும், சபரிமலையில் தங்கவும் sabarimalaonline.org.in என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு (Travancore Devaswom Board) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரிசன நேரங்களில், "இருமுடி"யுடன் 18 ஆம் படி ஏறி வரும் பக்தர்களும், இருமுடி இல்லாமல் 18ஆம் படி ஏறாமல் விரதம் மட்டும் இருந்து "சிவில் தரிசன" வரிசையில் வரும் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே "சிவில் தரிசனம்" அனுமதிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போடு அறிவித்துள்ளது.
இன்று திறக்கப்பட்டுள்ள நடை வருகிற 21 ஆம் தேதி வரை திறந்திருக்கும் எனவும், காலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications