சிகரெட் போல சமோசா, ஜிலேபிக்கும் வருகிறது எச்சரிக்கை வாசகம்.. மத்திய அரசு ஏற்பாடு!
டெல்லி: ஆரோக்கியமற்ற உணவு முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமோசா, ஜிலேபி போன்ற பிரபலமான ஸ்நாக் ஐட்டங்களில் விரைவில் சிகரெட் பாக்கெட் போல சுகாதார எச்சரிக்கைகள் இடம்பெறும் என்று அரசு அறிவித்துள்ளது.
நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் முதற்கட்டமாக இந்த விழிப்புணர்வு வாசகம் இடம் பெற உள்ளது. வரும் நாட்களில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இது போன்ற எச்சரிக்கை வாசகம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சமோசா, ஜிலேபி, வடபாவ், பக்கோடா உள்ளிட்ட தின்பண்டங்கள் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படுகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இவற்றை விரும்பிச் சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளில் அதிக அளவு எண்ணெய், சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன.
இதனால் உடல் பருத்து பலரும் இதய நோய் ஏற்பட்டு விரைவில் மரணமடைய நேரிடுகிறது. இளவயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முறையான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்காதது தான் காரணம் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்தியாவில் பலரும் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் பருமனால் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக துரித உணவு, இனிப்பு மற்றும் எண்ணெய் மிகுந்த பலகாரங்கள் சாப்பிடுவதால், உடல் பருமன் ஏற்படுகிறது. வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 44 கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் உடல் பருமனால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சமோசா, ஜிலேபி ஆகியவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் கேடு குறித்தும் விரிவாக விவரிக்கும் விதத்தில் நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் எச்சரிக்கை வாசகம் அமைய உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு விடுதிகள், கேண்டீன்களில் சமோசா, ஜிலேபி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை விளக்கி எச்சரிக்கை வாசகம் இடம்பெறும். அதில் சர்க்கரை, கொழுப்பு உள்ளிட்ட பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமை குறித்த வாசகங்கள் அடங்கிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருப்பது போல சமோசா, ஜிலேபி சாப்பிடுவதால் ஏற்படும் தீமை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக சமோசா, ஜிலேபி போன்ற பாரம்பரிய உணவு மீது தடை விதிக்கப்போவதில்லை. கடைகளில் சமோசா, ஜிலேபி எப்போதும் கிடைக்கும். யாரும் பயப்பட வேண்டாம். அதை சாப்பிடுவதால் ஏற்படும் தீமை குறித்து மட்டுமே இப்போதைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications