For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை பேக்காமன் கோவிலில் பட்டியலினத்தவர் நுழைவு: நடந்தது என்ன?

By BBC News தமிழ்
|
பேக்காமன் கருப்பசாமி கோயில்
BBC
பேக்காமன் கருப்பசாமி கோயில்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள ஆனையூர் கொக்குளம் கிராமத்தில் நீண்ட நாட்களாக நுழைய முடியாமல் இருந்த பேக்காமன் கோவிலுக்குள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு பட்டியலினத்தவர் நுழைந்துள்ளனர். இதன் பின்னணி என்ன?

மதுரை மாவட்டத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள திருமங்கலம் தாலூகாவில் அமைந்திருக்கிறது ஆனையூர் கொக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் பேக்காமன் கருப்பசாமி என்ற அருள்மிகு கருப்பண்ணசாமி கோயில் அமைந்திருக்கிறது.

இந்தக் கோயிலுக்குள் பட்டியிலனத்தவர் நுழைய இதுவரை அனுமதிக்கப்பட்டதில்லை. அவர்கள் கோவிலுக்கு வெளியில் நின்ற படியேதான் சாமியை வணங்க வேண்டும்.

இந்தக் கோயிலுக்குள் அனைவரும் வந்து வழிபட அனுமதி அளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று பிற்பகல் நான்கரை மணியளவில் சுமார் 50 பட்டியலினத்தினர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறையினர் முன்னிலையில் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டனர்.

பேக்காமன் கருப்பசாமி கோயில்
BBC
பேக்காமன் கருப்பசாமி கோயில்

நீண்ட நாட்களாகவே அந்தக் கோவிலுக்குள் தங்களை அனுமதிக்க வேண்டுமெனப் போராடி வந்த பட்டியலினத்தினர், இந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஜூலை 31ஆம் தேதியன்று ஆடித் திருவிழாவுக்குக் கொடியேற்றும்போது கோயிலுக்குள் நுழையப் போவதாக அறிவித்திருந்தனர்.

ஆனால், அப்படி நடந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடுமென மாவட்ட நிர்வாகம் கருதியதால், ஒரு நாள் முன்கூட்டியே இந்த கோவில் நுழைவை நடத்தியிருக்கிறது.

அந்தக் கோயிலின் பூசாரியாக இருந்த முத்தய்யாவும் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், ஜூலை 30ஆம் தேதியன்று பட்டியலினத்தவர் கோவிலுக்குள் நுழைந்தபோது அவர்களுக்கு பூசை செய்யவோ விபூதியைக் கொடுக்கவோ அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து அவருடைய மூத்த சகோதரரை அழைத்துவந்து அதிகாரிகள் பூசைகளைச் செய்ய வைத்தனர்.

இந்தக் கோயில் எப்போது கட்டப்பட்டது என்பது குறித்த தெளிவான தகவல்கள் யாரிடமும் இல்லை. முதலில் நடுகல் வழிபாடாகத் துவங்கி, பிறகு வயல்காட்டிற்கு நடுவில் சிலை வைக்கப்பட்டு வழிபடப்பட்டதாகவும் கடந்த நூற்றாண்டின் மத்தியில் சுற்றுச்சுவர் வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

"இந்த சுற்றுச்சுவர் கட்டப்பட்ட பிறகுதான் பட்டியலினத்தவரை இந்தக் கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். படித்துவிட்டு பெங்களூரில் ஐடி துறையில் பணியாற்றிய அன்பழகன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கத்தை மீறி கோவிலுக்குள் செல்ல முயன்று தடுக்கப்பட்டார்" என்கிறார் இப்பகுதியில் செயல்பட்டுவரும் அறிவுச் சமூகம் அமைப்பைச் சேர்ந்த தமிழ் முதல்வன்.

"மூன்று வருடங்களுக்கு முன்பாகவே உள்ளே சென்று வழிபட முயன்றேன். அப்போது எனது தந்தையே தடுத்துவிட்டார். பிறகு இந்த ஆண்டு பிப்ரவரியில் செல்லும்போது பூசாரி பிரச்சனை செய்தார். இதையடுத்துதான் மாவட்ட நிர்வாகத்தை அணுகினோம். வழக்கு தொடரப்பட்டது" என்கிறார் அன்பழகன்.

பேக்காமன் கோயிலின் பின்னணியும் உரிமையும்

பேக்காமன் கருப்பசாமி கோயில்
BBC
பேக்காமன் கருப்பசாமி கோயில்

இந்த நிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த கமலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த மனுவின்படி இந்தக் கோவில் பழக்க வழக்கங்கள் குறித்து ஒவ்வொரு தரப்பும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

கமலா முன்வைத்த வாதத்தின்படி, "கொக்குளம் கிராமத்தில் வசிக்கும் 15 குடும்பத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவரில் ஆண்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பட்டியலினத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் பூப்படையும்வரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தக் கோவில் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது.

இதனை நுட்பமாக ஆராயும்போது இந்தக் கோவில் பட்டியலினத்தவரின் குலசாமியாக பல ஆண்டுகள் இருந்த நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று பங்காளிகளில் ஒரு பங்காளி வகையறாவை மட்டும் வசப்படுத்தி கோவிலுக்குள் அனுமதித்துவிட்டு, பிறரைக் கோவிலைவிட்டு வெளியில் நிறுத்திவிட்டனர்.

கோவிலுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை அனுபவிப்பதற்காகவே பட்டியலினத்தினரின் ஒரு பகுதியினரை மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கிறார்கள்" என கூறியிருந்தார்.

இதற்குப் பதிலாக மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் சார்பில் முத்தையா பூசாரி ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார். அதன்படி, "இந்தக் கோவிலானது கொக்குளத்தைச் சேர்ந்த ஆறு பங்காளிகளான 1. வெறியத் தேவர், 2, கட்டபின்ன தேவர், 3. கறுப்பத் தேவர், 4. சடச்சித் தேவர், 5. சேத்துரான் தேவர், 6. கன்னித்தேவர் ஆகியோர் சேர்ந்து அவர்களது இடத்தில் கட்டினர்.

இந்தக் கோவிலுக்கு பூசாரியாக வெறியத்தேவனின் இளையதாரத்து மகன் இருந்தார். இவரிடம் கட்டையன் என்பவர் விவசாய வேலைகளைப் பார்த்துவந்ததோடு, கோவில் பணிகளிலும் உதவியாக இருந்தார். ஒரு முறை ஆடி உச்சி பூஜையின்போது, பூசாரியாக இருந்தவர் ஆதிவழக்கப்படி நடக்கத் தவறிவிட்டார். பூஜை நடந்தாக வேண்டுமென்பதால், கட்டையன் பூசைகளை நடத்தினார்.

பேக்காமன் கருப்பசாமி கோயில்
BBC
பேக்காமன் கருப்பசாமி கோயில்

கொக்குளம் கிராமத்தில் சூத்தையன் கூட்டம், வெள்ளையன் கூட்டம், குள்ளி கூட்டம் என மூன்று வகையறாக்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இதில் கட்டையன் சூத்தையன் கூட்டத்தைச் சேர்ந்தவர். கட்டையன் வகையறாவுக்கு கோவிலுக்கு அருகில் நிலம் கொடுத்து, அவரை பூசாரியாக ஆறு பங்காளிகளும் நியமித்தனர்.

சூத்தையன் கூட்டத்தில் இந்த கட்டையன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல முடியும். அவர்களே பெரிய கோடாங்கியாக இருப்பார்கள்.

கட்டையன் பரம்பரையைச் சேராத, ஆனால், சூத்தையன் கூட்டத்தைச் சேர்ந்த மற்றொருவர் சின்னக் கோடாங்கியாக இருப்பார்கள். இந்த சின்னக் கோடாங்கி கோவிலுக்குள் செல்வதில்லை. இந்த ஆதி வழக்கத்தைக் குலைக்கக்கூடாது" எனக் கூறப்பட்டிருந்தது.

பேக்காமன் கருப்பசாமி கோயில்
BBC
பேக்காமன் கருப்பசாமி கோயில்

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் கருத்தைக் கேட்டபோது, மதுரை மாவட்ட இந்து அறநிலையத் துறையின் துணை ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், அந்தக் கோவில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் எனக் கூறப்பட்டது.

கோவிலுக்குச் சொந்தமாக 1.05 ஹெக்டேர் நஞ்சை நிலமும் 1.02 ஹெக்டேர் புஞ்சை நிலமும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பக்தர்களிடையே பாகுபாடு காண்பிக்கப்படுவதில்லை என்றும் இந்த கொக்குளம் கருப்பணசாமி கோயிலிலும் அதுபோல கட்டுப்பாடுகள் எதையும் அறநிலையத் துறை விதிக்கவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தக் கோவிலில் அனைத்துத் தரப்பினரும் வழிபட வேண்டிய ஏற்பாடுகளை செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தான், ஒரு சிறிய குழுவாக பட்டியலினத்தவரை கோவிலுக்குள் அழைத்துச் சென்றது காவல்துறை.

"கடவுள் நிச்சயம் தண்டிப்பார்": பூசாரி முத்தய்யா

பேக்காமன் கருப்பசாமி கோயில்
BBC
பேக்காமன் கருப்பசாமி கோயில்

இது குறித்து அந்தக் கோவிலை நிர்வகித்துவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த கொடிச் சந்திரசேகரிடம் கேட்டபோது, "பிரச்சனைதான் முடிந்துவிட்டதே.. திரும்பத் திரும்ப எதற்குக் கேட்கிறீர்கள்? நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களும் வழிபடுகிறார்கள். நாங்களும் வழிபடுகிறோம். அவ்வளவுதான்" என்று முடித்துக்கொண்டார்.

கோவிலின் பூசாரியான முத்தய்யாவிடம் இது குறித்துக் கேட்டபோது, "நானும் பட்டியலினத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால், என் வீட்டுப் பெண்கள்கூட இந்தக் கோவிலுக்குள் வந்து வணங்க அனுமதி இல்லை. அவர்கள் வெளியில் நின்றுதான் வணங்குவார்கள். அப்படியிருக்கும்போது, வழக்கத்தை மீறி நீதிமன்ற உத்தரவைப் பெற்று அவர்கள் உள்ளே வந்து வணங்குகிறார்கள். அதனால், என் கையால் விபூதி தரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்" என்றார்.

"இந்தக் கோவிலை ஆறு வீட்டுக் கள்ளர்களுக்குச் சொந்தமானது. ஆனால், கோவில் நிலம் நத்தம் புறம்போக்கில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக கோவிலுக்குள் எல்லோரையும் போகலாம் எனச் சொல்லிவிட்டது நீதிமன்றம். சாமி என்னோடு பேசும். இவர்களை நிச்சயம் தண்டிப்பதாகச் சொல்லியிருக்கிறது சாமி" என்கிறார் முத்தய்யா.

இப்போதும் கோவிலுக்கு வரும் பட்டியலினத்தவருக்கு முத்தய்யா விபூதி கொடுப்பதில்லை. விபூதித் தட்டிலிருக்கும் விபூதியை அவர்களே எடுத்துப் பூசிக் கொள்கிறார்கள்.

"இன்று ஆடிப் பெருக்கு என்பதால் நிறைய பட்டியலினத்தவர் வந்து வழிபட்டிருக்கிறார்கள். தொடர்ந்து வழிபடுவார்கள். பூசாரி பட்டியலினத்தவருக்கு பூசை செய்ய மறுப்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டிருக்கிறேன்" என்கிறார் அன்பழகன்.

இப்போது அந்தக் கோவிலுக்குள் அனைவரும் நுழைந்து வழிபட்டாலும் நிலைமை உஷ்ணமாகவே இருக்கிறது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நிலைமையைக் கண்காணித்து வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Scheduled caste people entered into Madurai Pekkamman temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X