வகுப்பில் பேசிய 4 வயது மாணவனை 3 மணி நேரம் நாய்க்கூண்டில் அடைத்து சித்ரவதை- கேரளாவில் பயங்கரம்
திருவனந்தபுரம்: வகுப்பில் தனது சகமாணவனுடன் பேசியதற்கு தண்டனையாக நான்கு வயது மாணவனை சுமார் 3 மணி நேரம் நாய்க்கூண்டில் அடைத்து வைத்து பள்ளி நிர்வாகம் சித்ரவதை செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து உடனடியாக அப்பளியை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடப்பனக்குன்னு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இப்பள்ளியில் யூகேஜி படித்து வரும் 4 வயது மாணவன் ஒருவன், கடந்த வியாழனன்று வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, தனது சகமாணவருடன் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், தலைமை ஆசிரியையின் உத்தரவுடன் அம்மாணவரை நாய்க் கூண்டில் அடைத்துள்ளார். சுமார் 3 மணி நேரங்களுக்கும் மேலாக நாய்க்கூண்டில் அழுதபடியே இருந்துள்ளான் அச்சிறுவன்.
இதற்கிடையே அதே பள்ளியில் பயிலும் அச்சிறுவனின் அக்கா, தனது தம்பி நாய்க்கூண்டில் அடைக்கப் பட்டிருப்பதை எதேச்சையாகக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக தலைமை ஆசிரியையிடம் முறையிட்டுள்ளார் அம்மாணவி.
ஆனால், சிறுவன் நாய்க்கூண்டில் அடைக்கப் பட்டதை வெளியில் கூறக்கூடாது என அம்மாணவியை மிரட்டியுள்ளார் தலைமை ஆசிரியை. ஆனபோதும், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி, தன் தம்பிக்கு அளிக்கப் பட்ட தண்டனை தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெற்றோர், பள்ளி நிர்வாகம் மீது போலீசில் புகார் அளித்தனர்.
4 வயது சிறுவனுக்கு அளிக்கப்பட்ட மனிதாபிமானமற்ற தண்டனை குறித்து கேள்விப்பட்ட அப்பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து கடந்த திங்களன்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலாவையும், அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர். நேற்று அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில சமூக நலத்துறை அமைச்சர் எம்.கே.முனீரும், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் ஜே.பி.ஜோஷியும் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையே கல்வித்துறை துணை இயக்குநர் அளித்த அறிக்கையில், வீட்டு வளாகத்தை மாற்றியமைத்து அப்பள்ளி செயல்பட்டு வருவதாகவும், அங்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அப்பள்ளியை மூட உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications