தமிழ்நாடு பள்ளிகள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படுவதால் ஆசிரியர்களுக்கு நெருக்கடியா?

Subscribe to Oneindia Tamil
தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதால் ஆசிரியர்களுக்கு நெருக்கடியா
Getty Images
தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதால் ஆசிரியர்களுக்கு நெருக்கடியா

தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு அனுமதியளித்து விட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் தயக்கம் காட்டியுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் பள்ளிக்கல்வி அதிகாரிகள். என்ன நடந்தது?

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 16 மாதங்களாக பள்ளிகளும் கல்லூரிகளும் செயல்படாமல் உள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகள் நடப்பதால் அவர்களின் கற்றல் திறனில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் சுட்டிக் காட்டி வந்தனர். அதேநேரம், பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுவதில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அவர்களின் 10 மற்றும் பிளஸ் 1 மதிப்பெண்ணையும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கிட்டு தசம எண்களில் மதிப்பெண் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்தே பள்ளிகளைத் திறப்பதில் அரசு ஆர்வம் காட்டிவந்தது. ஆனால், மருத்துவத் துறையினரின் எச்சரிக்கை காரணமாக கல்விக் கூடங்களைத் திறப்பது தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருவதால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 ஆகிய வகுப்புகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்காக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதிலும், ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும்' எனவும் உத்தரவு வெளியானது.

பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டல்கள்

இதையடுத்து, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா?' என பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. நேற்று (30 ஆம் தேதி) காலை முதலே பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக கல்வி அதிகாரிகள் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள், மாணவர்கள் வருகை, பள்ளிகளின் புறச்சூழல், தடுப்பூசி விவகாரம் எனப் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இதன்பின்னர் பல்வேறு துறைகளின் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்விக் கூடங்களைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளார்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாரத்தில் ஆறு நாள்கள் மட்டும் பள்ளி வேலை நாள்கள் எனவும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளியைப் பின்பற்றி அமர வைக்க வேண்டும். 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடவசதி இல்லையென்றால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடத் தயங்கும் ஆசிரியர்கள்

தடுப்பூசி
Getty Images
தடுப்பூசி

மேலும், உயர்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகள் தினசரி செயல்பட வேண்டும். பள்ளிகளில் போதிய இடவசதி இல்லையென்றால் 9 ஆம் வகுப்பு சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் வகுப்புக்கு வர இயலாத மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி, சோப்புகளைப் பயன்படுத்தி கைகளைக் கழுவ வேண்டும். பள்ளிகளுக்கு வருவதில் இருந்து விலக்கு பெற்ற ஆசிரியர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டாயமாக பள்ளிகளுக்கு வர வேண்டும். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?" என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் மருத்துவ காரணங்களைக் காட்டியே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். அப்படிப் பார்த்தால் ஒரு பள்ளிக்கு 10 சதவிகித ஆசிரியர்கள் தடுப்பூசி போடாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கும் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு இல்லாததை அறிந்து கடந்த வெள்ளிக்கிழமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் சைதாப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் அவசர அவசரமாக ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆசிரியர்களுக்கு என்ன நெருக்கடி?

தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் எவரும் மாணவர்களோடு தொடர்பில் இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி ஒரு வகுப்புக்கு தலா 20 மாணவர்களுக்கு மட்டுமே வகுப்பெடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் நெருக்கம் நிறைந்த வகுப்புகளில் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பாடம் எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்கின்றனர்.

இது குறித்து மேலும் விவரித்த அதிகாரிகள், அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4,000 மாணவிகள் உள்ளனர். இவர்களின் அக்கவுன்டன்சி பிரிவில் மட்டும் வகுப்புக்கு 60 மாணவிகள் உள்ளனர். இவர்களில் 20 பேருக்கு மட்டும் வகுப்பெடுத்தால் அந்த ஆசிரியருக்குத்தான் சிரமங்கள் ஏற்படும். இதைப் பற்றியும் துறையின் உயர் அதிகாரிகளிடம் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் திறக்கப்படும் பள்ளிகள் - தடுப்பூசி போடத் தயங்கும் ஆசிரியர்கள்
BBC
தமிழ்நாட்டில் திறக்கப்படும் பள்ளிகள் - தடுப்பூசி போடத் தயங்கும் ஆசிரியர்கள்

அடுத்ததாக, பள்ளிகளில் உள்ள வாகனங்களில் பலவும் சரியான பராமரிப்பு இல்லாத நிலையிலேயே உள்ளன. பள்ளிகளைத் திறந்தால் மாணவர்கள் பாதிப்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துகளும் பேசப்பட்டன. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை என பல்வேறு துறைகளின் நிபுணர்கள் கொடுத்த பரிந்துரைகளை ஆலோசித்த பிறகே பள்ளிகளைத் திறக்கலாம் என அரசு முடிவெடுத்தது," என்கின்றனர்.

பள்ளிகளைத் திறந்தாலும் பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவுகிறதே?" என மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். பள்ளிகளைத் திறக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. ஆசிரியர்கள் பலரும் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்திவிட்டனர். பொது சுகாதாரத்துறையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கமிட்டி அமைத்து முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். பொதுத்தேர்வின்போது பறக்கும் படை அதிகாரிகள் வருவதுபோல இந்தக் குழுவினர் அடிக்கடி பள்ளிகளில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளின் அருகில் உள்ள மருத்துவமனைகளோடு பள்ளி நிர்வாகங்கள் தொடர்பில் இருக்க வேண்டும். மருத்துவரீதியாக என்ன உதவிகள் தேவைப்பட்டாலும் அதனை நிவர்த்தி செய்து கொள்ளக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" என்கிறார்.

மாணவர்களின் திறன் குறைந்தது ஏன்?

மேலும், தற்போதுள்ள நிலைமையின்படி பார்த்தால் 70 சதவிகித மாணவர்களுக்கு மொழியியலில் திறன் குறைந்துவிட்டது. கணிதப் பாடத்தில் 80 சதவிகித திறன் குறைந்துவிட்டது என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஒன்றரை வருடங்களாக வகுப்புகள் நடத்தாமல் ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவதால் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்ய முடியவில்லை. தேர்வும் நடத்தாமல் தேர்ச்சியை அறிவித்துக் கொண்டே செல்கிறோம். இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நாளை அவர்கள் வேலைக்குச் செல்லும்போது கேள்விகளை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்படும். அதனால் பள்ளிகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி திறக்க வேண்டியது அவசியம்" என்கிறார்.

தமிழ்நாட்டில் திறக்கப்படும் பள்ளிகள் - தடுப்பூசி போடத் தயங்கும் ஆசிரியர்கள்
Getty Images
தமிழ்நாட்டில் திறக்கப்படும் பள்ளிகள் - தடுப்பூசி போடத் தயங்கும் ஆசிரியர்கள்

தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களும் கணிசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு சிக்கல் வராதா?" என்றோம். அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களுக்கு தடுப்பூசியை கட்டாயம் என அறிவித்துள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்ந்த வேறு பணிகளை அளிக்கலாம். தவிர, கொரோனா என்பது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. எப்போது கொரோனா தொற்று அதிகமாகின்றதோ, அப்போது பள்ளிகளை மூடிவிட்டு சிறிது கால அவகாசத்துக்குப் பிறகு மீண்டும் திறக்க வேண்டும்" என்கிறார்.

உளவியல் சிக்கல்கள் தீரும்

இதையடுத்து, பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரத்துறை வல்லுநரும் அரசின் கோவிட் தடுப்புக் குழு உறுப்பினருமான மருத்துவர் குழந்தைசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

பள்ளிகள் பலவும் நல்ல காற்றோட்டமான வசதிகளுடன் உள்ளன. மூன்று ஜன்னல்களுடன் ஒவ்வொரு வகுப்பறைகளும் செயல்படுகின்றன. ஒரு வகுப்பறைக்கு 20 பேர் என அனுமதிக்க உள்ளனர். ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சில இடங்களில் பிரச்னை வரத்தான் செய்யும். அதனால் எந்தவித சிக்கலும் வரப் போவதில்லை" என்கிறார்.

மேலும், பள்ளிகளைத் திறக்காமல் இருப்பதால் மாணவர்கள் பல்வேறு உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் வேலைகளுக்குச் சென்று பழகிவிட்டால் அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவது சிரமம். கோவிட் தடுப்பு நடவடிக்கைகளோடு பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டது சரியானது. அவ்வாறு செய்யாமல் இருந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+