காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் வெறியாட்டம்! பாதுகாப்புப் படையினருடன் தொடரும் துப்பாக்கி சண்டை!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை முதலே பாதுகாப்புப் படையினருக்கும் பாகிஸ்தான் தூண்டிவிட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் இம்மோதல் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை அழிக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து இம்மோதல் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேற்று அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் நமது பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைகிற துயரமும் தொடருகிறது.
நாட்டின் 78-வது சுதந்திர தின கொண்டாட்டங்களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சீர்குலைக்க முயற்சிப்பர் என்பதால் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் கோகர்நாக் வனப்பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து இருதரப்பினரிடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் நமது வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் கிஷ்ட்வார் மாவட்ட வனப்பகுதியிலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பில் பதிலடி தரப்பட்டது. இந்த மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications