
டெல்லி ஏர்போர்ட்ல ராணுவ வீரர்கள் என்னை சுற்றி வளைச்சிட்டாங்க.. அப்புறம் என்னாச்சு? சீமான் கலகலப்பு
செஞ்சி: டெல்லி விமான நிலையத்தில் என்னை ராணுவத்தினர் சுற்றி வளைச்சுட்டாங்க.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அப்போது டெல்லி விமான நிலையத்திற்கு ஒரு முறை சென்ற போது தனக்கு நேர்ந்த சம்பவத்தை அவர் கூறியது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த விழாவில் அவர் பேசுகையில் நானும் கட்சியில் உள்ள பிரபு, மூத்தவர் ஆகியோர் ஒரு முறை டெல்லி விமான நிலையத்திற்கு சென்றோம்.
ஹரியானா உள்ளாட்சி தேர்தல்.. அதிக இடங்களில் வென்ற பாஜக! சப்ரைஸ் தந்த ஆம் ஆத்மி! காங்-க்கு என்னாச்சு

கார்
அப்போது காரில் போனோம், பிரபு காரை பின்னாடி எடுத்து விட்டுட்டு வரேன் என கூறிவிட்டு சென்றார். அப்போது மூத்தவர் சிகரெட் பிடிக்க சென்றுவிட்டார். நான் முன்னாடி போய்விட்டேன். திடீரெனு பார்த்தா, என்னை ராணுவம் சுத்தி வளைச்சிட்டாங்க. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தம்பி பிரபுவும் ஒன்றும் புரியாமலே பதறிவிட்டான்.

சிகரெட்
மூத்தவர் அப்படியே சிகரெட் பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார். எனக்கும் எதுவும் புரியாம, என்ன சார் விஷயம் என கேட்பதற்குள் அந்த ராணுவ வீரர்கள் என்கிட்ட ஓடி வந்தாங்க. உடனே என்னை கட்டி பிடித்து அண்ணா ஒரே ஒரு செல்பி எடுக்கலாமா என கேட்டார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சொல்றீங்கன்னு கேட்டேன். அப்போது மீண்டும் அவர் அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு செல்பி எடுத்துக்கலாமா என கேட்டனர்.

போட்டோ
உடனே மூத்தவர் "ஏம்ப்பா கொஞ்ச நேரத்துல பதற வச்சிட்டீங்களே" என்றார். போட்டோ எடுத்துக் கொடுத்த பிறகு அவர்கள் கிளம்பும் போது மூத்தவரிடம் அண்ணனை பத்திரமாக பார்த்துக்கோங்க என கூறிவிட்டு சென்றார்கள். பின்னர் விமானத்தில் ஏறும்போது அவர் சல்யூட் அடித்துவிட்டு சென்றார்கள். இதற்கு மூத்தவர் தம்பி இதனாலதான் இந்த பயலுங்க பதவியை விட்டு கீழ இறங்கவே மாட்டேங்குறாங்க.

10 நிமிடங்கள்
நமக்கு இந்த 10 நிமிடத்தில் என்னா பரபரப்பு ஏற்படுத்திட்டாங்க என்றார். எனவே டெல்லி மட்டுமல்ல, நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா, காஷ்மீர் ஆகிய இடங்களிலும் நமக்குனு ஆள் இருக்குறாங்க. பஞ்சாப்பில் நிறைய சொந்தக்காரர்களும் பாசக்காரர்களும் இருக்கிறார்கள். 70 வயது, 80 வயது ஆள்கள் எல்லாம் என்னை சீமான் அண்ணா என்று ஆசையாக அழைப்பார்கள். உண்மையிலேயே நான்தான் சின்னவர். ஆனால் இங்கு ஆளாளுக்கு பெரியவர், சின்னவர் என சொல்லி வருகிறார்கள் என சீமான் பேசியிருந்தார்.

நீண்ட நெடிய வரலாறு
மேலும் அவர் பேசுகையில் நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழர் எனும் பேரினத்தின் மக்கள் நாம். நிலப்பரப்பை இழந்து மொழியை சிதைய கொடுத்து, கலை, இலக்கியம், பண்பாடுகள், வழிபாடுகள் எல்லாம் இழந்து காலடியில் குறுகி நிற்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது தம்பிகளுடன் சீமான் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாகவே அறிவித்துள்ளார். எனினும் அவர் திமுகவுடனும் விடுதலைச் சிறுத்தைகளுடன் தற்போது இணக்கமாக போவதால் திமுகவுடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் அவர் என்ன முடிவை கையில் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட்சி தொடங்கியதிலிருந்து கடைபிடித்து வந்த தனித்து போட்டி என்பதை கடைப்பிடிப்பாரா இல்லை திமுகவுடன் கூட்டணிக்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.