நிர்வாணமாக நடக்கவிட்டு.. நடுவயலில் பலாத்காரம்.. மணிப்பூரில் 2 பிரிவினரின் மோதலுக்கு என்னதான் காரணம்?
இம்பால்: மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் கலவரம் உச்சத்தை அடைந்து உள்ளது. அங்கே கலவரத்தில் குகி பிரிவை சேர்ந்த பழங்குடி பெண்கள் இருவர் நிர்வாணமாக நடக்கவிடப்பட்டு உள்ளனர்.
இந்த பெண்களை சாலையில் நிர்வாணமாக அழைத்து சென்று, வயலில் வைத்து பல ஆண்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இப்போதுதான் வெளியாகி உள்ளது.
மக்கள் இடையே இந்த வீடியோ மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை நாட்கள் கழித்து வீடியோ வெளியான காரணத்தால் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது மணிப்பூர் மாநில போலீஸ்.

பாஜக ஆளும் மணிப்பூரை இந்த கலவரம் நொறுக்கி போட்டுள்ளது. கலவரத்தை தொடர்ந்து அங்கே போராட்டக்காரர்களை, கலவரர்காரர்களை கண்டதும் சுட உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2 மாதங்கள் நடக்கும் இந்த கலவரம் தற்போது உச்சத்தை அடைந்து உள்ளது. அங்கே இதுவரை 25000 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
கலவரம் இன்னும் அங்கு அடங்காமல் உச்சத்தில் இருக்கிறது. இந்திய ராணுவமும், அசாம் ரைபிள் படையும் அங்கே களமிறக்கப்பட்டு அங்கே கலவரர்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அங்கே கலவரம் கைமீறி சென்றுள்ளதால்.. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மணிப்பூர் குத்துசண்டை வீராங்கனை மேரி கோம்.. என் மாநிலம் பற்றி எரிகிறது என்று சொல்லும் அளவிற்கு அங்கே நிலைமை கைமீறி சென்றுள்ளது.
அங்கே நடக்கும் கலவரத்திற்கு என்ன காரணம்?: எல்லா வடகிழக்கு மாநிலங்களிலும் இருப்பது போல அங்கேயும் மலைவாழ் மக்களுக்கும் - நிலப்பகுதி மக்களுக்கும் இடையில் இருக்கும் மோதல்தான் மணிப்பூரிலும் நடக்கிறது. மணிப்பூரில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி மலைவாழ் மக்கள் நிலப்பகுதியில் வசிக்கும் மெய்ட்டி மக்களுக்கும் இடையில்தான் மோதல். அங்கே 53% மக்கள்தொகையைக் கொண்ட மெய்ட்டி பெரும்பான்மை சமூகமாக உள்ளனர். அதே சமயம் குகி உள்ளிட்ட பழங்குடி சமூகங்கள் 40% மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.
மணிப்பூரில் 34 அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினர் உள்ளனர். அவை பரவலாக நாகா பழங்குடியினர் (24%) மற்றும் குகி/ஜோமி பழங்குடியினர் (16%) என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 53% மக்கள்தொகையைக் கொண்ட மெய்ட்டி பெரும்பான்மை சமூகமாக உள்ள போதிலும் அவர்கள் ஒரே நிலப்பரப்பில் வசித்து வருகிறார்கள். மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 10 சதவிகித இடங்களில் மட்டுமே அவர்கள் வசித்து வருகிறார்கள்.
மீதம் உள்ள பழங்குடியினர் 90 சதவிகித இடங்களில் வசித்து வருகிறார்கள். அங்கே இருப்பது 90 சதவிகிதம் மலைகள்தான். பெரும்பாலும் மலைகளில் குகி போன்ற பழங்குடியினர்தான் வசித்து வருகிறார்கள். இங்கே இப்போது பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலான குகி பிரிவினர் கிறிஸ்துவர்கள். அவர்கள் எஸ்டி பிரிவின் கீழ் வருகின்றனர்.
மெய்ட்டி பிரிவினர் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்று உள்ளனர். இவர்கள் ஓபிசி பிரிவில் வருகின்றனர். சிலர் எஸ்டி பிரிவில் வருகின்றனர். இந்த மெய்ட்டி இந்துக்களை எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மெய்ட்டி பிரிவு மக்கள் பல காலமாக கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.ஆனால் மெய்ட்டி பிரிவினர் எஸ்டி ஆகும் பட்சத்தில் பழங்குடிகளான எங்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று குகி என்று பிரிவினர் எதிர்த்து வருகின்றனர்.
அங்கே பழங்குடி பாதுகாப்பு சட்டம் இருப்பதால் மெய்ட்டி பிரிவினர் குகி பகுதி வசிக்கும் காட்டு பகுதியில் நிலங்களை எல்லாம் வாங்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே பாஜக அரசு மெய்ட்டி பிரிவினருக்கு எஸ்டி இடஒதுக்கீடு கொடுக்க மும்முரமாக இருக்கிறது. மெஜாரிட்டி இவர்கள்தான், இவர்களின் ஆதரவில் எளிதாக தேர்தல்களை வெல்ல முடியும் என்பதால் பாஜக இவர்களுக்கு எஸ்டி இடஒதுக்கீடு கொடுக்க நினைக்கிறது.
ஆனால் இதை குகி பழங்குடியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவர்கள் நிலப்பகுதியில் உள்ளனர். நாங்கள் காட்டில் உள்ளோம். எங்களுக்கே இந்த மண் சொந்தம். நாங்கள் மைனாரிட்டி. அதனால் எங்களுக்குத்தான் இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்று குகி பிரிவினர் தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூரில் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்திய பிறகு, மெய்ட்டீஸ்களுக்கு ஓபிசி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பெற தகுதி பெற்றனர். மணிப்பூரில், STக்கான ஒதுக்கீடு 31%, OBCகள் 17% இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர், மேலும் SCகளுக்கு 2% இடஒதுக்கீடு உள்ளது.
என்ன சிக்கல்?: இந்த நிலையில்தான் கடந்த மார்ச் 27ம் தேதி, எஸ்டி பட்டியலில் மெய்ட்டி பிரிவை சேர்ப்பதற்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க மணிப்பூர் மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கோரிக்கையை முன் வைத்து மெய்ட்டி பிரிவை சேர்ந்த இடஒதுக்கீடு ஆர்வலர்கள் தாக்கல் செய்த பல மனுக்களை விசாரித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு காரணமாக மெய்ட்டி பிரிவிற்கு எஸ்டி இடஒதுக்கீடு கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன. அதேபோல் மெய்ட்டி பிரிவினர் பலர் அங்கே குடியேறி இருக்கும் குகி பழங்குடியினர் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
சிலர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று புகார் வைக்கின்றனர்.இதனால் என்ஆர்சி கொண்டு வர வேண்டும் என்றும் மெய்ட்டி பிரிவினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது போக அங்கே பாஜக அரசு காட்டு பகுதியில் கட்டியதாக கூறி 3 தேவாலயங்களை இடிக்கவும் முடிவு செய்துள்ளது. இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான கிறிஸ்துவர்களான குகி மக்கள் கோபத்தில் உள்ளனர்.
இதை எதிர்த்தே அங்கே குகி பிரிவினர் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் மெய்ட்டி பிரிவினர் தாக்குதல் நடத்த.. இந்த மோதல் தற்போது கலவரமாக உருவெடுத்து உள்ளது.இந்த கலவரத்தை தடுக்க அங்கே தற்போது ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications