பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்கள்.. 12 வருடத்துக்கு பிறகு நடந்தது என்ன?
காங்டாக்: சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அப்பெண்ணின் வயிற்றில் 2 கத்தரிக்கோல்கள் இருந்த சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் கூடுதல் அதிர்ச்சியாக 12 ஆண்டுகளாக இரண்டு கத்தரிக்கோல்கள் அப்பெண்ணின் வயிற்றில் இருப்பது தெரியவந்துள்ளது.
சிக்கிம் மாநிலம், காங்டாக்கைச் சேர்ந்தவர் 45 வயது மதிக்கத்தக்க பெண். இவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, காங்டாக்கில் உள்ள சர் துடோப் நாம்கியால் நினைவு மருத்துவமனையில் (எஸ்டிஎன்எம்) வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் எக்ஸ்-ரே எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அப்பெண்ணும் எக்ஸ்ரே எடுத்துள்ளார். அந்த எக்ஸ்-ரேவை எடுத்து பார்த்தபோது அதில் 2 கத்தரிக்கோல்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பெண்ணிடம் மருத்துவர்கள் கேட்டபோது, கடந்த 2012 ஆம் ஆண்டு இதே எஸ்டிஎன்எம் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குடல்வால் அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை செய்த மருத்துவர்கள் கவனக் குறைவாக அந்த கத்தரிக்கோல்களை வயிற்றிலேயே வைத்து தைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, எஸ்டிஎன்எம் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழுவினர் அப்பெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்தனர்.
பின்னர், வயிற்றில் இருந்த 2 கத்தரிக்கோல்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். தற்போது அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில் அந்தப் பெண் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, புதுச்சேரியில் குடல் வால் அறுவை சிகிச்சையின்போது மருத்துவ உபகரணத்தை வைத்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவர் 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அப்போது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை பிறந்துள்ளது. பின்னர், அப்பெண் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட வலி என பொறுத்துக் கொண்டிருந்துள்ளார். ஒருகட்டத்தில் தொடர்ந்து தீவிர வலி இருந்ததால் 2010 ஆம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனாலும், வலி குறையாததால் தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றபோது குடல்வால் பிரச்னை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2010 நவம்பரில் குடல் வால் நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். அப்போது, அவரது வயிற்றுப் பகுதியில் மருத்துவ உபகரணமான ஆர்ட்ரி பார்செப்ஸ் உள்ளே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அன்றே அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த உபகரணம் அகற்றப்பட்டது. மேலும், பிரபாவதிக்கு ரூ. 7 லட்சம் நஷ்டஈடு மற்றும் வழக்குத் தொகையாக ரூ. 20,000 என மொத்தம் ரூ. 7 லட்சத்து 20 ஆயிரம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வழங்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications