ஜம்மு காஷ்மீரில் அமித் ஷா.. ஸ்னிப்பர்கள், ஷார்ப் ஷூட்டர்கள் குவிப்பு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
ஸ்ரீநகர்: 3 நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார். அவரது பாதுகாப்பிற்காக ஸ்னிப்பர்கள் என்று அழைக்கப்படக்கூடிய துப்பாக்கி பயிற்சி பெற்ற வீரர்கள், விண்ணில் பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ட்ரோன்கள், ஷார்ப் ஷூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளார்கள்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதிகள் அங்குள்ள பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
குறிப்பாக, வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவதாக அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு பயந்து திரும்பி கொண்டு இருக்கிறார்கள்.
அங்குள்ள சிறுபான்மை மக்கள்தான் இதில், அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பாதுகாப்பு நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.

பழிக்கு பழி
ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசன பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு சலுகை, 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி வாபஸ் பெறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மீது தாக்குதல்களை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்

ஆளுநர் மாளிகை
அமித்ஷா வருகையையொட்டி குப்கர் ரோட்டிலுள்ள ஆளுநர் மாளிகை பகுதியை சுற்றியுள்ள சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு பெரும் அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து பல்வேறு அதிகாரிகளுடன் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

சார்ஜா விமானம்
உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சுற்றுப் பயணத்தின் முதல் நாளான இன்று, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து அரபு எமிரேட்சில் உள்ள சார்ஜா நகரத்திற்கு நேரடி விமான சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறார். ராணுவ அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.

உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
உளவுத்துறை பிரிவு தலைவர் அரவிந்த் குமார், எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் பங்கஜ் சிங், சிஆர்பிஎஃப் தலைவர் மற்றும் என்எஸ்ஜி தலைவர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் உயர் போலீஸ் ஆகியோருடன் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமித் ஷாவிடம் ஆலோசனை செய்ய உள்ளனர்.

பொதுக் கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை, அமித் ஷா ஜம்முவுக்குச் செல்கிறார். அங்கு அவர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஜன் சம்வாத் என்று அழைக்கப்படும் இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிறகு அவர் மீண்டும் ஸ்ரீநகருக்கு திரும்புவார். அங்கு அவர் திங்கள்கிழமை வரை, மூன்று நாட்கள் தங்கியிருப்பார்.

கிராமசபை
திங்கட்கிழமையன்று, சர்பஞ்ச்களை (கிராமத் தலைவர்களை) சந்தித்து அமித் ஷா உரையாடுவார். "ஸ்னைப்பர்கள் மற்றும் ஷார்ப்ஷூட்டர்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது. பாதசாரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இது பொதுமக்களை துன்புறுத்துவதற்காக அல்ல, அவர்களின் பாதுகாப்பிற்காகவும்தான்," என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications