நாங்க நாட்டிலேயே இல்லை: "மோடி யோகா"வை புறக்கணித்த சோனியா, ராகுல்
டெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவில்லை.
சர்வதேச யோகா தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த யோகா நிகழ்ச்சியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

அரசியலில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ராஜ்பாத் வந்து மோடியுடன் சேர்ந்து யோகா செய்தார். இந்நிலையில் டெல்லியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு மோடி அழைப்பு விடுத்திருந்தும் அவர்கள் வரவில்லை. சோனியா காந்தி தனது மகள் பிரியங்கா காந்தியுடன் தனிப்பட்ட காரணத்திற்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். அவர்கள் கிளம்பியதை அடுத்து நேற்று ராகுலும் வெளிநாட்டிற்கு கிளம்பிச் சென்றார்.
அவர்கள் ஒரு வாரம் வெளிநாட்டில் இருந்து விட்டு நாடு திரும்ப உள்ளனர். அவர்கள் என்ன காரணத்திற்காக வெளிநாடு சென்றுள்ளனர் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications