ஜெ. வாங்கிய வங்கி கடன் விவரங்களை இன்று தாக்கல் செய்ய கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா வாங்கிய கடன் விவரங்களை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பெங்களூர் விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹா சிறைத்தண்டனை விதித்தார். ஆனால் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஜெயலலிதா உள்ளிட்டோரை கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார்.

இதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மனு மீதான விசாரணை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி இறுதிவாதத்தை முன்வைத்திருந்தார். நேற்றைய விசாரணையில் கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா ஆஜரானார்.
நேற்றைய வாதத்தின் போது ஆச்சார்யா, சொத்து குவிப்பு வழக்கை ஜெயலலிதா இழுத்தடித்து பற்றி விவரித்தார். அத்துடன் கர்நாடகா அரசுக்கு மேல்முறையீடு செய்ய அதிகாரம் என்ற ஜெயலலிதா தரப்பு மனுவும் கூட இழுத்தடிப்பு உத்திதான்; ஏனெனில் கர்நாடகா உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் ஏற்கனவே கர்நாடகா அரசுதான், அரசு தரப்பு என உறுதி செய்திருக்கிறது. இது முடிந்து போன விவகாரம். ஆகையால் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய கர்நாடகா அரசுக்கு அனைத்து அதிகாரம் இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஜெயலலிதா உள்ளிட்டோரை கர்நாடகா உயர்நீதிமன்றம் எந்த ஒரு நியாய காரணமும் இல்லாமல் விடுதலை செய்ததாகவும் ஆச்சார்யா தம்முடைய வாதத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் ஜெயலலிதா வாங்கிய கடன்கள் குறித்த அனைத்து விவரங்களையும் இன்று கர்நாட்கா அரசு தரப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையையும் இன்றைக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.












Click it and Unblock the Notifications